திருவண்ணாமலை, மார்ச் 19: கார் மீது பைக் மோதியதால் தகராறு ஏற்பட்டது. இதில் காரை அடித்து நொறுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை வேங்கிக்கால் அண்ணா நுழைவு வாயில் அருகே, வேலூர் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, பைக்கில் வந்த வாலிபர் எதிர்பாராத விதமாக காரின் பின்பக்கம் மோதியது. அதனால், காரில் பயணம் செய்தவர்களுக்கும், பைக்கில் சென்ற வாலிபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காரை அதிவேகமாக ஓட்டிச் சென்று, திடீரென பிரேக் அடித்ததால் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது என பைக்கில் சென்ற வாலிபர் தெரிவித்து, திடீரென கார் கண்ணாடியை சரமாரியாக அடித்து நொறுக்கினார். அதனால், அவரது கையில் கண்ணாடி துண்டுகள் கிழித்து ரத்தம் சொட்டியது. ஆனாலும், தொடர்ந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கிருந்தவர்கள், அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, திருவண்ணாமலை தாலுகா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post காரை அடித்து நொறுக்கிய வாலிபர் கைது கார் மீது பைக் மோதியதால் தகராறு appeared first on Dinakaran.