செங்கம், மார்ச் 15: செங்கம் அருகே வெறிநாய் கடித்ததில் ரேபீஸ் வைரஸ் தாக்கி, வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த விண்ணவனூர் கிராமத்தை சேர்ந்தவர் 32 வயது வாலிபர். கூலித்தொழிலாளியான இவரை சில வாரங்களுக்கு முன்பு தெருவில் சுற்றித்திரிந்த வெறிநாய் கடித்துள்ளது. இதற்காக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு முறை மட்டும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கர்நாடகாவுக்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். தொடர்ந்து தடுப்பூசி போடாததால், அங்கு அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதியடைந்துள்ளார். இதையடுத்து சக தொழிலாளர்கள், சிகிச்சை பெற்று வருமாறு அறிவுறுத்தி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்படி 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த வாலிபர் பஸ் நிறுத்தத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசிக்கொண்டு சுற்றித்திரிந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். குடும்பத்தினர் வந்து வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு டாக்டர்கள் பரிந்துரைத்தனர். அங்கு நடந்த பரிசோதனையில் வெறிநாய் கடித்ததில் வாலிபருக்கு ரேபீஸ் வைரஸ் தாக்கியது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த வாலிபர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் சார்பில், வாலிபரின் உடல் நகராட்சி மைதானத்தில் நேற்று முன்தினம் மாலை தகனம் செய்யப்பட்டது.
The post வெறிநாய் கடித்ததில் ரேபீஸ் வைரஸ் தாக்கி வாலிபர் சாவு செங்கம் அருகே பரிதாபம் appeared first on Dinakaran.