ரூ.52.90 கோடியில் புனரமைக்கப்படும் வில்லிவாக்கம் ஏரியில் 12 லட்சம் எம்எல்டி நீர் தேக்கலாம்: மேயர் பிரியா தகவல்

சென்னை: அண்ணாநகர் மண்டலம், வில்லிவாக்கம் ஏரியில் ரூ.52.90 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பல்வேறு பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதை தொடர்ந்து, மேயர் பிரியா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வில்லிவாக்கம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் ரூ.1.48 கோடி மதிப்பில் கோசாலை மையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த கோசாலை மையமானது 200 மாடுகளைப் பராமரிக்கும் வகையில் கட்டப்படவுள்ளது.

இன்னும் இரண்டு மாதங்களில் கட்டி முடிக்கப்படும். சென்னை மாநகராட்சியில் முதல்முறையாக வில்லிவாக்கம் ஏரியில் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஏரியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வில்லிவாக்கம் பகுதியைச் சுற்றிலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் நிலை இருந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் வில்லிவாக்கம் ஏரியின் கொள்ளளவு 10 ஆயிரம் எம்.எல்.டி என்பதை, தற்பொழுது 12 லட்சம் எம்.எல்.டி. நீர்த்தேக்கம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூடுதலாக 600 கனஅடி நீரை சேமிக்கும் வகையில் புதிய குளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது’’ என்றார்.

The post ரூ.52.90 கோடியில் புனரமைக்கப்படும் வில்லிவாக்கம் ஏரியில் 12 லட்சம் எம்எல்டி நீர் தேக்கலாம்: மேயர் பிரியா தகவல் appeared first on Dinakaran.

Related Stories: