வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றான பிருந்தா திரையரங்கம் இடிப்பு: அடுக்குமாடி குடியிருப்பாகிறது

பெரம்பூர்: செல்போன் மற்றும் ஓடிடி பயன்பாடுகள் வந்த பின்பு திரையரங்குகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இன்டர்நெட் யுகத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் ஒரு படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்ட பிறகு ஒரே நாளில் அந்த படம் ஆன்லைனில் வந்து விடுகிறது. இதனால் திரையரங்கிற்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. மேலும் திரையரங்குகளில் வெளியான பின்பு அல்லது திரையரங்குகளில் படம் வெளிவராமலே அதனை ஓடிடி எனப்படும் தொழில்நுட்பம் மூலம் படத்தை வெளியிடுகின்றனர். வீட்டில் அமர்ந்து கொண்டே பார்க்கும் வசதி பொதுமக்களுக்கு கிடைத்து விடுவதால் தியேட்டர்களுக்கு சென்று வீண் செலவு செய்வதையும் தவிர்க்க முடியும் என்ற காரணத்தினால் பொதுமக்களும் இதற்கு நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு ஊரிலும் அடையாளமாக திகழ்ந்த திரையரங்குகள் தற்போது இடிக்கப்பட்டு வணிக வளாகங்கள் ஆகவும் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறி வருகின்றன.

சென்னையில் தனது முத்திரையை பதித்த திரையரங்ககளான அகஸ்தியா, காமதேனு, கிருஷ்ணவேணி, சித்ரா, கெயிட்டி, காசினோ, பிளாசா, பைலட், அலங்கார், மினர்வா, கிருஷ்ணா, செலக்ட், க்ரவுன், புவனேஸ்வரி, பாரத், பிரபாத், பிராட்வே, எலிகண்ட், நட்ராஜ், பத்மனாபா, வெலிங்டன், மகாலஷ்மி, சரஸ்வதி, முருகன் டாக்கீஸ், ராக்ஸி, வீனஸ், சயானி, மேகலா, உமா ராக்ஸி, சரவணா, பாலாஜி, சரஸ்வதி, லட்சுமி, சபையர், ஆனந்த், உதயம் போன்ற பல தியேட்டர்கள் இடிக்கப்பட்டு விட்டன. சில தியேட்டர்கள் தங்களது முத்திரையை இழந்து பாழடைந்த கட்டிடங்களாக உள்ளன. அந்த வகையில், வடசென்னையின் அடையாளமாக திகழ்ந்த பெரம்பூர் பிருந்தா திரையரங்கம் தற்போது மூடப்படுகிறது. 1985ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தால் பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் பிருந்தா திரையரங்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

லோகநாதன் செட்டியார் என்பவர் அப்போது இதன் உரிமையாளராக இருந்தார். தற்போது அவரது மறைவிற்கு பின் கடைசியாக அவரது வழித்தோன்றல்களான விஸ்வநாதன் சந்திரசேகர் ஆகியோர் இதனை பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த திரையரங்கம் நேற்று முன்தினத்துடன் தனது கடைசி பட காட்சியை நடத்தி முடித்து நேற்று முதல் பட காட்சிகள் நிறுத்தப்பட்டு இந்த திரையரங்கம் இடிக்கப்பட உள்ளது. தனியார் கட்டுமான நிறுவனம் இந்த இடத்தை வாங்கி உள்ளதாகவும் விரைவில் இந்த கட்டிடம் இடிக்கப்பட்டு தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வர உள்ளதும் தெரியவந்துள்ளது. 1985ம் ஆண்டு இந்த திரையரங்கில் உதய கீதம் மற்றும் நான் சிகப்பு மனிதன் என்ற இரண்டு படங்கள் வெளியாகின.

வடசென்னையில் முதல் குளிர்சாதன வசதியுடன் கூடிய தியேட்டர் என்ற பெருமையை பிருந்தா திரையரங்கம் பெற்று இருந்தது. 15 கிரவுண்ட் பரப்பளவு உள்ள இந்த தியேட்டரில் 1170 பேர் அமர்ந்து படம் பார்க்கலாம். வட சென்னையில் மிகப்பெரிய தியேட்டர் என்ற பெருமையும் இது பெற்றது. ரஜினி படம் எதுவாக இருந்தாலும் முதல் ஷோ கண்டிப்பாக இந்த தியேட்டரில் களைக்கட்டும். அந்த அளவிற்கு ரஜினி ரசிகர்கள் விரும்பி படம் பார்க்கும் தியேட்டர்களில் பிருந்தா திரையரங்கமும் ஒன்று. பாட்ஷா, மாப்பிள்ளை, படையப்பா உள்ளிட்ட பல படங்கள் இந்த தியேட்டரில் அதிக நாட்கள் ஓடிய சாதனை படைத்துள்ளன.

தொடர்ந்து 40 வருடங்கள் இந்த தியேட்டர் பொதுமக்களின் குறிப்பாக வடசென்னை மக்களின் அடையாளமாக திகழ்ந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் கடைசியாக டிராகன் படம் திரையிடப்பட்டு காட்சிகள் அனைத்தும் முடிக்கப்பட்டது. அந்த திரைப்படமே இந்த தியேட்டரில் கடைசியாக வெளியான திரைப்படமாகவும் அமைந்து விட்டது. இதுகுறித்து அந்த தியேட்டரில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்த மேனேஜர் பன்னீர்செல்வம் கூறுகையில், ‘‘ரஜினியின் அனைத்து படங்களும் இங்கு திரையிடப்பட்டது. அதனால் இந்த தியேட்டருக்கு ரஜினி தியேட்டர் என பெயர் உண்டு. கடந்த 40 ஆண்டுகளாக மக்களுக்கு நிறைவான பங்களிப்பை அழைத்துள்ளோம் என்பதில் மகிழ்ச்சி” என்றார்.

The post வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றான பிருந்தா திரையரங்கம் இடிப்பு: அடுக்குமாடி குடியிருப்பாகிறது appeared first on Dinakaran.

Related Stories: