வேளச்சேரி, மார்ச் 13: திருவான்மியூர் ரயில்நிலையம் அருகே 130 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு வடமாநில சிறுமி உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை திருவான்மியூர் ரயில் நிலையம் அருகில் நேற்று முன்தினம் மாலை தரமணி காவல்நிலைய தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 17 வயது பெண் தோழியுடன் ஒரு வடமாநில வாலிபர் சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிவதை போலீசார் கண்டனர். பின்னர் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.
இதை தொடர்ந்து, அந்த வாலிபர் வைத்திருந்த பையை தனிப்படை போலீசார் சோதனை செய்தனர். அந்த பையில், விற்பனைக்காக ஹெராயின் போதை பொருளை அந்த வடமாநில வாலிபர் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, 17 வயதான சிறுமி மற்றும் வடமாநில வாலிபரை காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சுகைல் உசேன் (22) என்பதும், கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், கடந்த ஆண்டு சொந்த ஊருக்கு சென்ற சுகைல் உசேன், அங்கிருந்து கடந்த சில நாட்களுக்கு முன் தனது 17 வயது பெண் தோழியுடன் சென்னைக்கு ரயிலில் ஹெராயின் போதை பொருளை கடத்தி வந்து, விற்பனை செய்து வந்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து, தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹெராயின் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 17 வயது பெண் தோழி, சுகைல் உசேன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
பின்னர், அவர்களிடம் இருந்து 2,400 சிறிய பிளாஸ்டிக் குப்பிகளில் அடைக்கப்பட்டிருந்த 130 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் என கூறப்படுகிறது. மேலும், 3 செல்போன் மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
The post திருவான்மியூர் ரயில்நிலையம் அருகே 130 கிராம் ஹெராயின் பறிமுதல்: வடமாநில சிறுமி உள்ளிட்ட இருவர் கைது appeared first on Dinakaran.