லிப்ட் அறுந்து வாலிபர் உயிரிழந்த விவகாரம்: பிரபல நட்சத்திர ஓட்டலின் தலைமை பொறியாளர் கைது

சென்னை: தேனாம்பேட்டையில் பழுதான லிப்ட் அறுந்து வாலிபர் ஒருவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, பிரபல நட்சத்திர ஓட்டல் தலைமை பொறியாளர் மற்றும் பழைய இரும்பு வியாபாரியை போலீசார் கைது செய்தனர். தேனாம்பேட்டை அண்ணாசாலையில் இயங்கி வரும் பிரபல நட்சத்திர ஓட்டலில், ஊழியர்களுக்கு என தனியாக கட்டிடத்தின் பின்புறம் லிப்ட் உள்ளது. இந்த லிப்ட் சில மாதங்களுக்கு முன் பழுதானதால், அதை அகற்றவிட்டு, புதிய லிப்ட் அமைக்க ஓட்டல் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, பழுதான லிப்டை பெரியமேடு பகுதியை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரியான அப்துல் காதர் என்பவருக்கு ஒப்பந்த அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், பழுதான லிப்டை அகற்றும் பணியில் நேற்று முன்தினம் அப்துல் காதர் உடன் ஷியம் சுந்தர் (34) மற்றும் வினோத் ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது திடீரென லிப்ட் அறுந்து கீழே விழுந்தது. இதில், கீழே பணியில் இருந்த ஷியம் சுந்தர் லிப்ட்க்கு அடியில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி, பணியின் போது அஜாக்கிரதையாக செயல்படுதல், பிறருக்கு மரணம் விளைவித்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, பிரபல நட்சத்திர ஓட்டல் தலைமை பொறியாளர் காமராஜ் மற்றும் பழைய இரும்பு வியாபாரி அப்துல் காதர் ஆகியோரை கைது செய்தனர்.

The post லிப்ட் அறுந்து வாலிபர் உயிரிழந்த விவகாரம்: பிரபல நட்சத்திர ஓட்டலின் தலைமை பொறியாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: