மாநகர பேருந்தில் பயணம் செய்ய போலீசாருக்கு நவீன அடையாள அட்டை: போலீஸ் கமிஷனர் அருண் வழங்கினார்

சென்னை: சட்டப்பேரவையில் முதல்வர் கடந்த 13.9.2021ம் ஆண்டு காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை அடையாள அட்டைகள் காண்பித்து பேருந்துகளில், போலீசார் அவர்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் பயணம் செய்யும் வகையில் நவீன அடையாள அட்டை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். முதல்வரின் அறிப்பை தொடர்ந்து கடந்த 2.8.2024ம் தேதி அதற்கான உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் முதல் காவலர்கள் வரை சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மூலம் இயக்கப்படும் குளிர்சாதன பேருந்துகள் தவிர மற்ற அனைத்து பேருந்துகளில் பயணம் செய்யும் வகையில், மாநகர போக்குவரத்து கழகம் மூலம் பயண நவீன அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் முதல் காவலர்கள் என மொத்தம் 11 ஆயிரத்து 21 பேருக்கு பயண நவீன அடையாள அட்டை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான நிகழ்ச்சி நேற்று சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.

அதில் போலீஸ் கமிஷனர் அருண் கலந்து கொண்டு இன்ஸ்பெக்டர்கள் முதல் காவலர்களுக்கான பயண நவீன அடையாள அட்டையை முதல் 10 போலீசாருக்கு வழங்கினர். இந்த பயண நவீன அட்டையை இன்ஸ்பெக்டர்கள் முதல் காவலர்கள் வரையிலான போலீசார் மாநகர பேருந்துகளில் அவர்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் நடத்துனர்களிடம் காண்பித்து பயணம் செய்யலாம். இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரட்கர் மற்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் பிரபுசங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post மாநகர பேருந்தில் பயணம் செய்ய போலீசாருக்கு நவீன அடையாள அட்டை: போலீஸ் கமிஷனர் அருண் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: