காரியாபட்டி, நவ. 20: விரிவாக்கம் செய்யப்பட்ட காரியாபட்டி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து பேரூராட்சி தலைவர், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். காரியாபட்டி பேரூராட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. பேருந்து நிலையத்தில் இடநெருக்கடி காரணமாக பேருந்துகள் உள்ளே வந்து செல்ல சிரமமாக இருந்தது. மேலும் பஸ்நிலையத்தில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில், காரியாபட்டி பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி ஒதுக்கீடு செய்தார்.. அதன்பேரில் கலைஞர் நகர்புற வளர்ச்சி திட்டத்தின் மூலமாக புதிய வணிக வளாகங்கள், நவீன கழிப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு விரிவாக்கம் செய்யப் பட்டது. மேலும் கலைஞர் நூற்றாண்டு நினைவு வளைவுகள் அமைக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு புதிய பேருந்து நிலைய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
தற்போது பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. காரியாபட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள், பேருந்துகள் வருகை, கால அட்டவனை அமைத்தல், குடிநீர் வசதி, தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைத்தல் மற்றும் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வு அறை வசதிகள் குறித்து பேரூராட்சி தலைவர் செந்தில் மற்றும் செயல் அலுவலர் முருகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பேரூராட்சி கவுன்சிலர்கள் முகமது முஸ்தபா, சரஸ்வதி பாண்டியராஜன், சங்கரேஸ்வரன், ஆகியோர் உடன் இருந்தனர்.
The post காரியாபட்டி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஆய்வு appeared first on Dinakaran.