வருசநாடு, நவ.20: கண்டமனூர் அருகே தெருநாய்கள் கடித்ததில் ஆட்டுக்குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம் குமிழங்குளத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (37). செம்மறி ஆடுகள் வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த பத்து நாட்களாக கண்டமனூர் அருகே கோவிந்த நகரத்தில் உள்ள பாண்டியராஜன் என்பவரின் தோட்டத்தில் கிடை அமைத்துள்ளார். கிடையில் 250 செம்மறி ஆடுகள் மற்றும் பிறந்து இரண்டு வாரங்கள் ஆன 26 குட்டிகள் இருந்துள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, மூர்த்தி குட்டிகளை கிடையில் வைத்து மூடிவிட்டு மற்ற ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார். மதிய வேளையில் தோட்டத்திற்குள் புகுந்த தெரு நாய்கள் கூட்டம் கிடையில் மூடி வைக்கப்பட்டிருந்த ஆட்டுக்குட்டிகளை கடித்து குதறின.
மாலை மீண்டும் கிடைக்கு வந்து பார்த்தபோது குட்டிகள் உடலில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், ஆட்டுக்குட்டிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். ஆனால் ஒன்றன்பின் ஒன்றாக 25 ஆடு குட்டிகளும் பலியானது. இதுகுறித்து கண்டமனூர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரினை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கண்டமனூர் அருகே தெருநாய் கடித்ததில் 25 செம்மறி ஆட்டுக்குட்டிகள் பலி appeared first on Dinakaran.