மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை சான்று பெற சிறப்பு முகாம்

 

திருப்பூர், நவ.20: திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகளை பெற மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் பதிவு செய்வது அவசியம். அவ்வாறு பதிவு செய்ய மருத்துவர்களிடமிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சான்று பெற வேண்டும் என்பது விதிமுறை. இந்நிலையில், நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான சான்று சிறப்பு முகாம் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.

காலை 9 மணி முதல் மதியம் 1:30 மணி வரை முகாம் நடைபெறும் என மகளிர் திட்ட பணியாளர்கள் தெரிவித்திருந்தனர். இதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றத்திறனாளிகள் காலை 8 மணி முதல் மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்தனர். ஆனால் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக போதிய மருத்துவர்கள் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இது குறித்து மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், ‘‘மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடத்தப்படும் போது மருத்துவர்கள் புறநோயாளிகளை பார்ப்பதற்கு செல்வதாக கூறிவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் நாங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தரைத்தளத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படுவதால் மருத்துவமனைக்குள் வந்து, பின் தரைத்தளத்திற்கு மாற்றுத்திறனாளிகள் வர சிரமப்படுகிறோம். முகாம் நடைபெறும்போது முகாமிற்கென தனி மருத்துவர்களை நியமிக்க வேண்டும்’’ என்றார்.

The post மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை சான்று பெற சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: