திருவாடானை,நவ.20: திருவாடானை அருகே பழையனக்கோட்டை பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்துள்ளது. இந்த மையத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் சத்துணவுடன் கூடிய முன்பருவக்கல்வி பயின்று வந்துள்ளனர். இந்நிலையில் அங்கு செயல்பட்டு வந்த பழைய அங்கன்வாடி மைய கட்டிடம் சேதமடைந்ததால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அகற்றி அப்புறப்படுத்தி விட்டனர். இதனால் அந்த அங்கன்வாடி மையம் தற்காலிகமாக அதனருகில் உள்ள கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தின் ஒரு பகுதியில் செயல்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் கடந்த 2018-19ம் ஆண்டு ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இந்த சூழலில் அருகில் உள்ள கிராம ஊராட்சி சேவை மையத்தின் ஒரு பகுதியில் தற்காலிகமாக செயல்படும் அங்கன்வாடி மையத்தின் தரைத்தளத்தில் போடப்பட்ட டைல்ஸ் கற்கள் உடைந்து ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டது.
இதனால் அந்த அங்கன்வாடி மையத்திற்கு தங்களது குழந்தைகளை அனுப்ப அப்பகுதி பெற்றோர்கள் அச்சப்பட்டு வருவதாகவும், இதனால் குறைவான எண்ணிக்கையில் குழந்தைகள் அங்கு வருவதாகவும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த அக்.6ம் தேதியன்று படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில் தினகரன் செய்தி எதிரொலியால் தளிர்மருங்கூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் இந்த புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post புதிய அங்கன்வாடி மையம் திறப்பு appeared first on Dinakaran.