சிவகங்கை, நவ.20: சிவகங்கை மாவட்டத்தில் பகல் நேரங்களில் பெய்யும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருகிறது. கடந்த மாதம் மூன்றாவது வாரத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பகல் நேரங்கள் மற்றும் மாலை முதல் இரவு வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று பகல், இரவு நேரங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்தது. சிவகங்கை, காளையார்கோவில், காரைக்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது. காலை 11மணி வரை மழை நீடித்தது. இதனால் அலுவலகம், பள்ளி, கல்லூரி மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்பவர்கள் பாதிப்படைந்தனர். நேற்று முன்தினம் மழை பெய்யும் பகுதிகளில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அறிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நேற்று எந்த அறிவிப்பும் இல்லாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் கடும் அவதியடைந்தனர். கடந்த இரண்டு நாட்களில் அதிகபட்சமாக காளையார்கோவிலில் 49.8மி.மீ மழை பெய்தது. சிவகங்கையில் 22.2மி.மீ, காரைக்குடியில் 21மி.மீ, தேவகோட்டையில் 15.8மி.மீ, திருப்புவனத்தில் 11.2மி.மீ, திருப்பத்தூரில் 10.4மி.மீ, இளையான்குடியில் 7மி.மீ, சிங்கம்புணரியில் 5.6மி.மீ, மழை பதிவானது.
கன மழையால் குளங்கள், கண்மாய்களுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கண்மாய்கள் மறுகால் போகிறது. தொடர் மழையால் விவசாயிகள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக பகலில் பெய்து வரும் மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் விவசாயப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
The post தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.