திருவாடானை,நவ.20: திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் சமேத வல்மீக நாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வெளியூர் பக்தர்கள் சாமி கும்பிட வருகின்றனர். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளியூர் பக்தர்கள் தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். மேலும் ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள், இந்த கோயிலுக்கும் வந்து செல்கின்றனர்.
அதிக மக்கள் வந்து செல்வதால் இங்கு தேங்காய் பழக்கடைகள், பேன்சி, பாத்திர கடைகள் என எல்லா விதமான கடைகளும் நூற்றுக்கணக்கில் உள்ளன. இந்த கடைகளுக்கு மொத்தமாக தேவையான சரக்குகளை கொள்முதல் செய்ய இங்குள்ள வியாபாரிகள் மதுரைக்கு செல்கின்றனர். மதுரைக்கு செல்ல வேண்டும் என்றால் திருவாடானை வரை பஸ்சில் வந்து, அங்கிருந்து மதுரைக்கு மற்றொரு பஸ்சில் பயணிக்க வேண்டும். இதனால் அதிக அளவில் சிரமப்பட வேண்டி உள்ளது.
எனவே திருவெற்றியூரில் இருந்து நேரடி பஸ் சேவை இயக்க வேண்டும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து திருவொற்றியூர் வணிகர்கள் சங்க பிரதிநிதிகள் கூறுகையில், திருவெற்றியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் இருப்பதால் ஏராளமான வெளியூர் பக்தர்கள் சாமி கும்பிட வருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் காளையார்கோயில் வழியாக மதுரை செல்ல வேண்டுமென்றால் இரண்டு பேருந்துகள் மாற வேண்டும்.
மேலும் இங்குள்ள வியாபாரிகள் கொள்முதல் செய்ய திருவாடானை சென்று மற்றொரு பேருந்து மாற வேண்டும். திருவெற்றியூரில் இருந்து திருச்சி, காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை ஆகிய ஊர்களுக்கு பேருந்து இயக்கப்படுகிறது. அதேபோன்று மதுரைக்கு நேரடி பேருந்து வசதி செய்து தரவேண்டும் என்றனர்.
The post திருவெற்றியூர்-மதுரைக்கு நேரடி பஸ் சேவை: வியாபாரிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.