புதுக்கோட்டை அருகே மீண்டும் பரபரப்பு குடிநீர் தொட்டியில் மாட்டுசாணம் கலப்பு: அதிகாரிகள் விசாரணை

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டுசாணம் கலக்கப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கம் விடுதி ஊராட்சியில் குருவண்டான் தெருவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இங்கிருந்து ஆதிதிராவிடர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் தெருவில் வசிக்கும் ரவிக்குமார் (37) என்பவர் குடிநீர் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று காலை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது குடிநீரில் மாட்டு சாணம் கலந்து வந்ததாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஆதிதிராவிடர் தெருவில் இருக்கும் இளைஞர்கள் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறி பார்த்தனர். அப்போது குடிநீர் தொட்டிக்குள் மாட்டு சாணம் கிடந்துள்ளது. தகவலறிந்து கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர் பெரியசாமி, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, ‘குடிநீர் தொட்டியில் இருந்த மாட்டு சாணத்தை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி மாட்டு சாணம் தானா என கண்டறியப்படும். அது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என பொதுமக்களிடம் உறுதியளித்தார். தொடர்ந்து பொதுமக்கள் பாதிக்காத வகையில் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து குடிநீர் விநியோகம் செய்ய ஆணையர் உத்தரவிட்டார். ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

The post புதுக்கோட்டை அருகே மீண்டும் பரபரப்பு குடிநீர் தொட்டியில் மாட்டுசாணம் கலப்பு: அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: