காயல்பட்டினத்தில் பட்டப்பகலில் துணிகரம் வியாபாரி வீட்டில் ஒன்றரை பவுன் நகை, ரூ.7லட்சம் கொள்ளை

ஆறுமுகநேரி : காயல்பட்டினத்தில் பட்டப்பகலில் காய்கறி வியாபாரி வீட்டில் ₹7லட்சம் மற்றும் ஒன்றரை பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.காயல்பட்டினம் உச்சினிமகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வேந்திரன்(57). இவர் அதே பகுதியில் காய்கறி கடை வருகிறார். இவரது மனைவி பார்வதி(57). வீட்டில் நேற்று முன்தினம் மதியம் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டில் புகுந்து ₹7லட்சம் மற்றும் 12 கிராம் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். இது குறித்து ஆறுமுகநேரி போலீசில் செல்வேந்திரன் புகார் தெரிவித்தார்.

ஆறுமுகநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: செல்வேந்திரனின் மூன்றாவது மகன் ஆனந்தலிங்கம்(25). கடந்த மார்ச் மாதம் கஞ்சா போதைபொருள் விற்பனை செய்த வழக்கில் ஆறுமுகநேரி போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து வைகுண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து ஆனந்தலிங்கத்தை உறவினர்கள் யாரும் நேரில் சென்று பார்க்கவில்லை. மேலும் ஜாமீன் எடுக்கவும் முன்வரவில்லை என தெரியவந்தது. அவருடன் சிறையில் இருந்த சேதுக்குவாய்த்தான் பகுதியை சேர்ந்த சதீஷ்(28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் தனது குடும்பத்தை பற்றியும், தன்னை யாரும் வந்து பார்க்கவில்லை என்பது பற்றியும் ஆனந்தலிங்கம், சதீஷிடம் கூறியுள்ளார். இதனையடுத்து தற்போது சதீஷ் ஜாமீனில் வெளிவந்தநிலையில், ஆனந்தலிங்கம் தெரிவித்த முகவரிக்கு சென்று அவரது பெற்றோரிடம் உங்கள் மகனை ஏன் சிறைக்கு சென்று பார்க்கவில்லை. அவன் உங்களை நினைத்துக்கொண்டே இருக்கிறான் என கூறியுள்ளார்.

மேலும் தங்கள் மகன் மே 2ம் தேதி திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து செல்வேந்திரன் மற்றும் அவரது மனைவி பார்வதி ஆகியோர் வீட்டில் இருந்து திருச்செந்தூர் கோர்ட்டுக்கு மகன் ஆனந்தலிங்கத்தை பார்க்க சென்றுள்ளனர். அங்கு தனது மகனை ஆஜர் படுத்தவில்லை என அறிந்துக்கொண்ட அவர்கள், சதீஷை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர்.

அதற்கு சதீஷ் சாத்தான்குளம் கோர்ட்டுக்கு கொண்டு வருவதாகவும், எனவே நீங்கள் அங்கு சென்று தங்கள் மகனை பார்க்கும் படி போனில் தெரிவித்துள்ளார். இதனிடையே சதீஷ், செல்வேந்திரன் வீட்டிற்கு சென்று அங்கு மின்மீட்டர் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து கதவை திறந்து கபோடில் வைக்கப்பட்டிருந்த 12 கிராம் தங்கநகை மற்றும் ரூ.7லட்சத்தை திருடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதைதொடர்ந்து ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக்அப்துல் காதர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சதீஷை தேடிவருகின்றனர். மேலும் இக்கொள்ளை வழக்கில் வேறு யாருக்கும் தெடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காயல்பட்டினத்தில் பட்டப்பகலில் துணிகரம் வியாபாரி வீட்டில் ஒன்றரை பவுன் நகை, ரூ.7லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: