ஆர்டிஐ மூலம் பல்வேறு கேள்விகளை கேட்ட சமூக ஆர்வலருக்கு சரமாரி வெட்டு

நெல்லை: ஆர்டிஐ மூலம் பல்வேறு கேள்விகளை கேட்ட சமூக ஆர்வலருக்கு சரமாரி வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தேவதாஸ் மகன் பெர்ட்டின் ராயன்(36). சமூக ஆர்வலரான இவர், தற்போது பாளை. மார்க்கெட் அந்தோனியார் கோயில் தெரு பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

நெல்லை மாநகர பகுதியில் அரசு விதிமுறை மீறல்கள் குறித்த கட்டிடங்கள், புறம்போக்கு காலிமனைகள் ஆக்கிரமிப்பு, முறையாக செயல்படாத கல் குவாரிகள் உள்ளிட்டவை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை திரட்டி உரிய அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அளித்து நடவடிக்கை எடுக்க செய்து வந்தார்.

தினமும் காலையில் அவர், பாளை. அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே அமைந்துள்ள இறகுப்பந்து அரங்கத்தில் விளையாட செல்வது வழக்கம். நேற்று காலை 6 மணிக்கும் பெர்ட்டின் ராயன் வழக்கம்போல் இறகுப்பந்து விளையாட பைக்கில் வந்தார். மாவட்ட தொழில் மையம் அருகே பெரியார் நகர் திருப்பத்தில் வந்த போது, அப்பகுதியில் மரத்தின் பின்னால் மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர், பெர்ட்டின் ராயனை வழிமறித்து அரிவாளால் அவரது தலை மற்றும் கையில் வெட்டிவிட்டு தப்பினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஐகிரவுண்ட் போலீசார், வெட்டுக் காயமடைந்த பெர்ட்டின் ராயனை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஆர்டிஐ மூலம் பல்வேறு கேள்விகளை கேட்ட சமூக ஆர்வலருக்கு சரமாரி வெட்டு appeared first on Dinakaran.

Related Stories: