நாகர்கோவில் : குளிர் சாதன வசதி இல்லாத, மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளுடன், குறைந்த கட்டணத்தில் தொலை தூரம் செல்ல அம்ரித் பாரத் ரயில்கள் விடப்பட்டுள்ளன. இதில் திருவனந்தபுரம் முதல் தாம்பரம் வரையிலும், நாகர்கோவில் – மங்களுரூ உள்பட 3 அம்ரித் பாரத் ரயில்களை நேற்று காலை திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி சந்திப்பு, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், செங்கல்பட்டு என 15 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த ரயில் நேற்று மதியம் 12.30 மணியளவில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வந்தடைந்தது.
இந்தரயிலுக்கு எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ தலைமையில், பா.ஜ கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் மலர்தூவி வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ரயில் எஞ்சின் டிரைவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். முதல் நாள் என்பதால், நெல்லை வரை கட்டணமின்றி பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர்.
மார்த்தாண்டம் நேற்று பிற்பகல் 11:55 மணிக்கு இந்த ரயில் மார்த்தாண்டத்தில் உள்ள குழித்துறை ரயில் நிலையம் வந்து சேர்ந்தது.அங்கு வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் பாஜ, பொதுமக்கள் சார்பில் ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. வணிகர் சங்க பேரமைப்பு மேற்கு மாவட்ட தலைவரும், ரயில்வே குழு உறுப்பினருமான அல்அமீன் தலைமை வகித்தார்.
வணிகர் சங்க பேரமைப்பு மாநில துணைச் செயலாளர் கார்த்திகேயன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் சந்தோஷ், செய்தி தொடர்பாளர் சதீஷ், பா.ஜ மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ், முன்னாள் தலைவர் தர்மராஜ், உண்ணாமலைக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயசீலன், நந்தினி, குழித்துறை நகராட்சி கவுன்சிலர்கள் விஜு, ரத்தினமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
