விழுப்புரம் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் வரும் 30ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை முடிக்க வேண்டும்

*சிறப்பு பார்வையாளர் ஆஷிம்குமார்மோடி உத்தரவு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் வரும் 30ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை முடிக்க வேண்டும் என தேர்தல் அலுவலர்களுக்கு, சிறப்பு பார்வையாளர் ஆஷிம்குமார்மோடி உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆஷிம்குமார்மோடி, மாவட்ட தேர்தல்அலுவலரான ஆட்சியர் ஷேக்அப்துல்ரஹ்மான் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் ஆஷிம்குமார்மோடி கூறியதாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கடந்த நவம்பர் 4ம்தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்றது.

இப்பணியில் வாக்குசாவடி நிலை அலுவலர்களும், வாக்குசாவடி மேற்பார்வையாளர்களும், வாக்குச்சாவடிநிலை முகவர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் 27.10.2025 தேதியின்படி விழுப்புரம் மாவட்டத்தில் இந்த 7 சட்டமன்ற தொகுதிகளில் 17,27,490 மொத்த வாக்காளர்களில் சிறப்புதீவிர திருத்தம் கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு 15,44,625 வாக்காளர்கள் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில் முகவரியில் வசிக்காத வாக்காளர்கள், இடமாற்றம் செய்த வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் என 1,07,685 வாக்காளர்களும், 67,182 இறந்த வாக்கானர்களும் மற்றும் 7,998 இரட்டை பதிவு வாக்காளர்களும் என மொத்தம் 1,82,856 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது.

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 2166 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள 1138 வாக்குச்சாவடி நிலை அமைவிடங்களில் 18 வயது பூர்த்தியடைந்த தகுதியான வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் தேவைப்படும் வாக்காளர்கள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெறாமல் உள்ள தகுதியான வாக்காளர்கள் அனைவரும் தங்கள் படிவங்களை வரும் 30ம்தேதிவரை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் 2002 வாக்காளர் பட்டியலில் வம்சாவழி சார்பில் இல்லா வாக்காளர்கள் மற்றும் தர்க்கரீதியான முரண்பாடுகள் உள்ள வாக்காளர்களுக்கு விசாரணை நடைபெற்று அதனை சரிசெய்து கணினியில் உள்ளீடு செய்யும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.

அதன்படி தற்போது விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2002 வாக்காளர் பட்டியலில் வம்சாவழி சார்பில் இல்லா வாக்காளர்கள் மற்றும் தர்க்கரீதியான முரண்பாடுகள் உள்ள வாக்கார்களுக்கு விசாரணை மேற்கொண்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் செயலியில் உள்ளீடு செய்யும் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் சம்மந்தப்பட்ட வாக்குபதிவு அலுவலர்கள், உதவி வாக்குபதிவு அலுவலர்கள், வாக்குசாவடி நிலை அலுவலர்களும், வாக்குசாவடி மேற்பார்வையாளர்களும் மற்றும் வாக்கு சாவடி நிலை முகவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து விரைவாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணியினை முடிப்பதோடு, 30ம்தேதிவரை படிவம் 6, படிவம்6ஏ, படிவம் 7 மற்றும் படிவம் 8 விண்ணப்பங்களை பெற்று விரைவாக முடிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், திருக்கோவிலூர் சப்-கலெக்டர் ஆனந்தகுமார்சிங், திண்டிவனம் சப்-கலெக்டர் ஆகாஷ், கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தேசிய வாக்காளர் தின பேரணி

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 16வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர் தின உறுதிமொழி மாவட்ட தேர்தல்நடத்தும் அலுவலரான ஆட்சியர் ஷேக்அப்துல்ரஹ்மான் தலைமையில் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மாணவ, மாணவிகள் பஙகேற்ற வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.

Related Stories: