மணல்மேடான பேய்க்குளம் குளம்

*அமலைச்செடிகள் ஆக்கிரமிப்பு

*அதிகளவு தண்ணீரை சேமித்து வைக்க முடியாத சூழல்

ஏரல் : சாயர்புரம் அருகேயுள்ள பேய்க்குளம் குளமானது அமலைச்செடி ஆக்கிரமிப்பு மற்றும் மணல்மேடாகி தூர்ந்து போனதால் அதிகளவு தண்ணீரை சேமித்து வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு, இந்த குளத்தை தூர்வாரித் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சாயர்புரம் அருகே உள்ள பேய்க்குளம் 312 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் கொண்ட மிகப் பெரிய குளமாக உள்ளது. இந்த குளத்தின் மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வருகிறது. குளத்தில் உள்ள 11 பாசன மடைகள் மூலம் தண்ணீர் விளைநிலங்களுக்கு செல்கிறது.

இக்குளத்திற்கு ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வடகால் வாய்க்கால் வழியாக தண்ணீர் வரும். வடகால் வாய்க்காலில் கடைசி பகுதியில் இந்த குளம் இருப்பதால் வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் வந்தால் மட்டுமே இக்குளத்திற்கு தண்ணீர் வந்து சேரும்.

இக்குளத்து நீரை நம்பி சாயர்புரம், நடுவைக்குறிச்சி, நந்தகோபாலபுரம், புளியநகர், சிவத்தையாபுரம், பேய்க்குளம், இருவப்பபுரம், சேர்வைக்காரன்மடம், தங்கம்மாள்புரம், போடம்மாள்புரம், கூட்டாம்புளி மற்றும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல், வாழை பயிரிட்டுள்ளனர்.

கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் பொழுதெல்லாம் விவசாயிகள், இப்பகுதியில் செயல்பட்டு வரும் விவசாய சங்கங்கள் மூலம் குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்கால் மற்றும் பாசன மடை வாய்க்கால்களை தூர்வாரி சீரமைத்து வருவதால் இப்பகுதியில் இன்று வரை விவசாயம் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தண்ணீர் தொழிற்சாலைகளுக்கு நேரடியாக பைப் லைன் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருவதால் வடகால் வாய்க்காலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் வந்தது போல் ஆண்டுதோறும் வருவதில்லை.

மேலும் பேய்க்குளம் குளமும் தூர்வாரப்படாததால் மணல் திட்டுகள் அதிகளவு ஏற்பட்டு உள்ளதால் குளத்திலும் மழை காலத்தில் தண்ணீரை அதிகளவு சேமித்து வைக்க முடியாமல் போய்விடுகிறது.

தற்போது குளத்தில் ஆகாயத்தாமரை மற்றும் செடி, கொடி ஆக்கிரமிப்பு அதிகளவு ஏற்பட்டுள்ளதால் தண்ணீரும் மாசுபட்டு போய் உள்ளது. இதனால் ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் தண்ணீர் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் போது இக்குளம் நிரம்பியது போல் உள்ள நிலையில் வடகால் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தம் செய்துவிட்டால் இக்குளத்தில் தேங்கியுள்ள தண்ணீரை வைத்து 20 நாள் விவசாயம் செய்வதற்கு கூட போதுமானதாக இல்லாமல் உடனடியாக வறண்டு போய்விடுகிறது.

இதனால் விவசாயிகள் தண்ணீரின்றி வாழைகளை காப்பாற்றிட போர் அமைத்து ஆயில் இன்ஜின் மூலம் தண்ணீர் பாய்ச்சி பலமடங்கு செலவு செய்ய வேண்டிய நிலைக்கு ஆண்டுதோறும் தள்ளப்பட்டு வருகின்றனர்.

இதனால் உற்பத்தி செலவு அதிகமாகி விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்காமல் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே அரசு, பேய்க்குளம் குளத்தை தூர்வாரி அதிகளவு தண்ணீரை சேமித்து வைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

‘‘தூர்வாரி தர வேண்டும்”

பேய்க்குளம் நிலச்சுவன்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்க தலைவர் குணசேகரன் கூறியதாவது: பேய்க்குளம் குளத்தை நம்பி இப்பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைமுறை தலைமுறையாக நெல், வாழை என விவசாயம் செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடே இல்லாமல் இருந்து வந்த நிலையில் குளம் மணல் திட்டு ஏற்பட்டு தூர்ந்து போனதால் அதிகளவு தண்ணீரை சேமித்து வைக்க முடியாததால் கோடை காலத்தில் குளம் வறண்டு இப்பகுதியில் நெல், வாழை கருகும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

இதனால் நாங்கள் ஆண்டுதோறும் பயிர்களை காப்பாற்றிட தண்ணீருக்காக சிரமப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே அரசு விவசாயிகள் நலன் கருதி இந்த குளத்தினை தூர்வாரித் தர வேண்டும். மேலும் இப்பகுதியில் வாழைத்தார் நல்ல விளைச்சல் இருக்கும்போது விலை இல்லாமல் போய்விடுகிறது. எனவே வாழைத்தார்களை பாதுகாத்து வைத்திட வாழைத்தார் பதப்படுத்திடும் குடோனும் அரசு அமைத்து தர வேண்டும், என்றார்.

Related Stories: