தர்மபுரி : தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்று பாட்டி, குழந்தையுடன் வந்த பெண் பெட்ரோல் ஊற்றி தீ குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு, நேற்று காலை ஒரு இளம்பெண், மூதாட்டி மற்றும் சிறுமியுடன் ஆட்டோவில் வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் ஆட்டோவில் இருந்து இறங்கியதும் மறைத்து வைத்திருந்த, ஒரு லிட்டர் கேனில் இருந்த பெட்ரோலை அவரது உடல் மீது ஊற்றினார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த பெண்ணிடமிருந்து பெட்ரோல் கேனை பறித்து, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் மாரண்டஅள்ளி அருகே, ஜக்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த தாதம்மாள்(85) மகள் வானஸ்திரி (55) என்பது தெரியவந்தது.
கடந்த 15ம் தேதி, வானஸ்திரி வசிக்கும் வீட்டின் அருகே, ஊராட்சிக்கு சொந்தமான மினி சின்டெக்ஸ் டேங்கில், குடிநீர் வழிந்து செல்வதை நிறுத்த முயன்றார்.
அப்போது, வானஸ்திரி மற்றும் அவர்களது உறவினர்களிடையே ஏற்பட்ட தகராறில் வானஸ்திரி, தாதம்மாளை ஆகிய இருவரையும், பக்கத்து வீட்டுக்காரர்கள் தாக்கினர்.
இதில் காயமடைந்த தாயும், மகளும் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து அவர்கள் அளித்த புகார் மீது, மாரண்டஅள்ளி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், நேற்று தாதம்மாள், வானஸ்திரியின் மகள் சரண்யா(36), அவருடைய 3 வயது பெண் குழந்தை, தாயை தாக்கிய உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர். இதையடுத்து, சரண்யாவை, தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.
