கூடலூர் அருகே ஓடும் பாண்டியாற்றில் இரும்பு பால அருவிகள் சுற்றுலா தலமாக்கப்படுமா?

*சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

கூடலூர் : கூடலூர் அருகே ஓடும் பாண்டியாற்றில் இரண்டு இடங்களில் காணப்படும் அருவிகள் சுற்றுலா தலமாக்கப்படுமா? என சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கூடலூரை அடுத்த இரும்பு பாலம் பகுதி வழியாக ஓடும் பாண்டியாற்றில் இரண்டு இடங்களில் அழகிய அருவிகள் காணப்படுகின்றன. பிரதான சாலையில் உள்ள பாலத்தை ஒட்டிய பகுதியிலும், அங்கிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திலும் இரண்டு அருவிகள் உள்ளன. இந்த சாலை வழியாக கேரளாவில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி மற்றும் மைசூருக்கு சென்று திரும்புகின்றனர்.

மேலும், இரும்பு பாலத்தை ஒட்டிய பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி உணவு அருந்தவும், ஓய்வு எடுக்கவும் பயன்படுத்தி கொள்கின்றனர்.

இந்த அருவி பகுதியை சுற்றுலா தலமாக மாற்ற பல ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மில்லர் மூலம் முயற்சிகள் மேற்கொள்ள பட்டது. இப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இதில் பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டு வந்தன.

கூடலூர் பகுதி வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்வதால் இங்குள்ள முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளையும், அழகிய இடங்களையும் சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தை ஒட்டிய நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏராளமான இடங்கள் உள்ளன. ஆனால், சுற்றுலாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் திட்டங்களும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. அவ்வப்போது உருவாக்கப்படும் புதிய திட்டங்களும் வனத்துறையின் தலையிட்டால் தடைப்பட்டு வருகிறது.

கேரளாவின் வயநாட்டில் உள்ள பல்வேறு இடங்களிலும் குறிப்பாக வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளில் சுற்றுலாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் இருந்தும் கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வயநாட்டிற்கு செல்ல துவங்கியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் வயநாடு மாவட்டம் மாறி வருகிறது. கூடலூரை அடுத்த பொன்னூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் ஒன்றிய அரசால் ரூ.70 கோடியில் உருவாக இருந்த சூழல் சுற்றுலா திட்டம் முடக்கப்பட்டுள்ளது.

ஊசி மலையில் இருந்து மாக்குமூலா வரை ரோப் கார் திட்டமும் ஆய்வுகளோடு நின்றுவிட்டது. இதுபோன்று சுற்றுலா திட்டங்கள் முடக்கப்பட்டு வருவதால் உள்ளூர் மக்களின் வருமான வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. சுற்றுலாவில் மக்களின் ஆர்வம் அதிகரித்து வருவதால், சுற்றுலா மூலம் வருமானம் ஈட்டும் தொழில்கள் அதிகரித்து வருகிறது.

இதனால் உள்ளூர் மக்களின் பொருளாதாரமும் மேம்பட்டு வருகிறது. கூடலூர் பகுதியில் உள்ள சுற்றுலா முக்கியத்துவம் வந்த இடங்களை மேம்படுத்தினால் அதிகமான சுற்றுலா பயணிகளை இந்த பகுதிக்கு ஈர்க்க முடியும்.

உள்ளூர் மக்களும் இந்த பொழுது போக்கு அம்சங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். பிரதான சாலை ஓரத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் வகையில் அமைந்துள்ள இரும்பு பாலம் அருவிகளை சுற்றுலாத்தலமாக மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்களும் சுற்றுலா ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: