தை மாதம் பிறந்துள்ளாதால் குந்தாரப்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரம்

வேப்பனஹள்ளி : குந்தாரப்பள்ளியில் நேற்று வாரச்சந்தை கூடியது. தை மாதம் பிறந்துள்ளதால் ஆடுகளை வாங்க அதிக அளவில் வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் சந்தை ஆடுகள் விற்பனை களைகட்டியது.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த குந்தாரப்பள்ளியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை கூடுகிறது.

இந்த சந்தையில் தீபாவளி, பக்ரீத், ரம்ஜான், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, இந்துக்கள் கோயில்களில் கொண்டாடும் மாசி, பங்குனி திருவிழா, குலதெய்வ திருவிழா மற்றும் தெவம் நிகழ்ச்சி ஆகிய நாட்களில் பல ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனையாகும்.

வனப்பகுதி ஒட்டிய கிராமங்களில் நல்ல மேய்ச்சல் வளத்தில் ஆடு, நாட்டுக்கோழிகளை வளர்ப்பதால், குந்தாரப்பள்ளி ஆடு, கோழிகளுக்கு என்றும் கிராக்கி உண்டு. பண்டிகை கால வாரச்சந்தைகளில் 10 ஆயிரம் ஆடுகள் வரையும், சுமார் 6 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் சந்தை ஆகும்.

கார்த்திகை, மார்கழி மாதம் சபரிமலை, மேல்மருவத்தூர் கோயில்களுக்கு விரதம் இருந்து பக்தர்கள் மாலை அணிந்ததால், குந்தாரப்பள்ளி கால்நடை சந்தையில் ஆடு, கோழி விற்பனை மந்தகதியில் நடந்து வந்தது. தற்போது தை பிறந்ததால் ஆடு, கோழி வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியது.

நேற்றைய சந்தைக்கு அதிகாலை முதலே ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு வந்திருந்தது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.

கடந்த சில மாதங்களாக சரிவில் இருந்த ஆடு, கோழிகளின் விலை அதிகரித்தது. ஆடுகள் எடைக்கு தகுந்தபடி ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும், நாட்டுக்கோழி, சேவல்கள் ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. வியாபாரிகள், இறைச்சி கடைக்காரர்கள் போட்டி போட்டு வாங்கிச்சென்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: