அங்கக வேளாண்மை திட்டத்தின் கீழ் உயிர் உரங்களுக்கு விவசாயிகளுக்கு மானியம்

*கலெக்டர் தகவல்

ஊட்டி : நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு நடப்பாண்டில் அங்கக வேளாண்மை திட்டத்தின் கீழ் மண்புழு உரம், பசுந்தாள் உர விதைகள், வேப்பம் புண்ணாக்கு, உயிர் உரம் மற்றும் கட்டுபாட்டு காரணிகள் போன்றவை மானியத்தில் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி பிங்கர்போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டுறவு இணை பதிவாளர் சித்ரா, தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளுக்கு துறை அதிகாரிகளிடம் இருந்து விவரம் பெறப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு பேசியதாவது:
தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் விதை கிழங்குகளின் விலையானது அரசாங்க குழுவால் நிர்ணயம் செய்யப்படுகிறது. விதை கிழங்குகள் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்டு தரம் பிரித்து உள்ளூர் கால சூழ்நிலைக்கேற்ப நல்ல மகசூல் கிடைக்கும் வகையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அனைத்து இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளும் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்து 2025-26ம் ஆண்டுக்கான அங்கக வேளாண்மை திட்டத்தில் பயன்பெறலாம். நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் பசுந்தாள் உரம் உற்பத்திக்கு தேவையான பசுந்தாள் உர விதைகள் அரசு தோட்டக்கலை பண்ணை நஞ்சநாடு மற்றும் கோல்கிரைன் ஆகிய பண்ணைகளில் கடந்த இரு ஆண்டுகளாக உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் 7800 கிலோ பசுந்தாள் உர விதைகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, டிரைகோடெர்மா, விரிடி மற்றும் பேசிலஸ் போன்ற உயிரியல் நோய் கட்டுபாட்டு காரணிகளை உற்பத்தி செய்ய ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உற்பத்தி செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் தோட்டக்கலை வட்டார உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

நடப்பாண்டில் டோலமைட், மண்புழு உரம், பசுந்தாள் உர விதைகள், வேப்பம் புண்ணாக்கு, உயிர் உரம் மற்றும் கட்டுப்பாட்டு காரணிகள் போன்றவை அங்கக வேளாண்மை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட உள்ளது. கூடலூரில் உள்ள சூரிய ஒளியில் இயங்கும் குளிர் பதன கிடங்கு பழுதுநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊட்டியில் உள்ள உழவர் சந்தை நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. கடைகள் பற்றாகுறை போன்ற பிரச்னைகள் ஏதும் இல்லை. பைகமந்து அண்ணாநகர் முதல் ஒசஹட்டி ஆடா வரை உள்ள ஓடையை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்து தூர்வாற நடவடிக்கை எடுக்கப்படும்.

நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியால் நிர்ணயிக்கப்படும் கடன் வழங்கல் அளவீட்டிற்கேற்ப கடன் தொகைகள் தொடர்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களால் அனுமதித்து வழங்கப்பட்டு வருகின்றன. கூடலூரில் வன உயிரினங்களால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு நிவாரண தொகை கால தாமதமின்றி வழங்கப்பட்டு வருகிறது. 01.04.2025 முதல் 14.01.2026 வரை 328 நபர்களுக்கு ரூ.129.180 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

2025-26ம் ஆண்டில் 100 நாள் வேலை திட்டத்தில் விவசாய நிலங்களில் பண்ணை குட்டை அமைத்தல், மீன் குட்டை அமைத்தல், கல்கரை அமைத்தல், மண் கரை அமைத்தல், தனிநபர் தோட்டத்தில் நாற்றங்கால் அமைத்தல், மரக்கன்று நடுதல், கிணறு அமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இதில், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories: