*கலெக்டர் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர் : பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களால் நடத்தப்படும் வகையில் அமைக்கப் பட்டுள்ள சிறுதானிய உணவகத்தை மாவட்ட கலெக்டர் மிருணாளினி திறந்து வைத்தார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கத்தின் கீழ், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்திடும் பொருட்டு, மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் மற்றும் முக்கிய இடங்களில் “மதி அங்காடி” மற்றும் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவ மனையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ்,சிறுதானிய உணவகம் அமைக்க கடனுதவி வழங்கும் திட்டத்தின் மூலம், ரூ10 லட்சம் மதிப்பில் பெரம்பலூர் அருகே, கோனேரிபாளையம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஓம்சக்தி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் அமைக்கப்பட்டுள்ள இந்த மதி சிறுதானிய உணவகத்தை, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் மூலம் நடத்தக்கூடிய உணவகத்தை பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் மிருணாளினி திறந்து வைத்தார்.
இந்த உணவகத்தில் வரகு அரிசி கஞ்சி, திணை அரிசி சக்கரை பொங்கல், சாமை அரிசி மிளகுப் பொங்கல், சாமை அரிசி சாம்பார் சாதம், தயிர் சாதம், வரகு அரிசி புலாவ், சோளம் அடைதோசை, பாசி பயிறு தோசை, சோளம் குழிபனியாரம், மசால் சுண்டல் மற்றும் கருப்பு சுண்டல் ஆகிய சிறுதானிய உணவகங்கள் குறைந்த விலையில் தரமாக பொதுமக்களுக்கு வழங்கப் படுகிறது.
இதேபோன்று இந்த நிதிஆண்டில் வேப்பூர் அரசு மகளிர் கலைஅறிவியல் கல்லூரி மற்றும் குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுதானிய உணவகம் துவங்கப் பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு சிறுதானிய உணவகமும் துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் கோபாலகிருஷ்ணன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் மாரிமுத்து, உதவி திட்ட அலுவலர் சசி குமார், மாவட்ட வள பயிற்றுநர் ராஜா, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும்பலர் கலந்து கொண்டனர்.
