திருமலை: சங்கராந்தி என்றாலே ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் சேவல் சண்டை கொண்டாட்டங்கள் உச்சத்தை எட்டும். குறிப்பாக சேவல் சண்டையின் மையமாக இருக்கும் பீமாவரத்தில், இந்த முறை பண்டிகை உற்சாகம் கடந்த காலத்தை தாண்டியதாக கூறப்படுகிறது. சேவல் சண்டை பந்தயங்களை காண ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலிருந்து ஏராளமான மக்கள் வருவதால், தங்கும் அறைகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது.
இதனால் பீமாவரம், ஏலூரு, தடேபள்ளிகுடேம் மற்றும் தனுகு போன்ற நகரங்களில் உள்ள சுமார் 150 ஓட்டல்கள் ஹவுஸ் புல்லாக உள்ளது. இதனை கருத்தில்கொண்டு அவற்றின் உரிமையாளர்கள் வாடகையை கடுமையாக உயர்த்தி வருகின்றனர். ஒரு அறை சராசரியாக ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை இருப்பது வழக்கம். ஆனால் சேவல் சண்டை சீசனுக்காக 3 நாள் தொகுப்புக்கு ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை அறை வாடகை உயர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக பீமாவரம் பகுதியில் உள்ள சில முக்கிய ஓட்டல்கள் 3 நாட்களுக்கு ஒரு அறைக்கு ரூ.1 லட்சம் என வாடகையை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை, பந்தயத்தில் அதிக அளவில் பணம் கட்டுவது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்தய நிபுணர்களுடன் ஏற்பாட்டாளர்கள் ஏற்கனவே ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.
தடேபள்ளிகுடேமில் ரூ.2.5 கோடிக்கு மிகப்பெரிய பந்தயத்திற்கு ஏற்பாடு தயாராக உள்ள நிலையில், சீசாலி, நாராயணபுரம் மற்றும் சீனாமிரம் போன்ற இடங்களில் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சட்டப்படி சேவல் சண்டை ஏற்பாடு செய்யக்கூடாது என்றாலும் மறுபுறம் கோதாவரி மாவட்டங்களில் சேவல் சண்டை பல கோடி ரூபாய் பந்தயத்துடன் நடத்தப்படுகிறது. அதன்படி பந்தய சேவல்களை போட்டியாளர்கள் பல்வேறு வகைகளில் தயார்படுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
