போதிய ஆதாரங்கள் இல்லாததால் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் விடுவிப்பு

 

ஐதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் நவ்தீப் பல்லபோலு என்பவர் மீது கடந்த 2023ம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள குடிமல்காபூர் காவல் நிலையத்தில், போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும், விற்பனை செய்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜே.னிவாஸ் ராவ் நேற்று தீர்ப்பளித்தார். அப்போது, ‘நடிகர் நவ்தீப்பிடம் இருந்து எந்தவிதமான போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை; சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்களுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மேலும், முதல் தகவல் அறிக்கை மற்றும் சாட்சிகளின் வாக்குமூலத்தில் அவரது பெயர் இடம்பெறவில்லை; பின்னர் சந்தேகத்தின் அடிப்படையிலேயே சேர்க்கப்பட்டுள்ளது’ என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் வழக்கை நடத்துவது சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகும் என்று கூறிய நீதிபதி, நடிகர் நவ்தீப் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட்டார். நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இருந்து நடிகர் நவ்தீப் விடுவிக்கப்பட்டிருப்பது அவருக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

Related Stories: