ஆன்லைன், டிஜிட்டல் கைது; சீனா, பாகிஸ்தான் உதவியுடன் ரூ.100 கோடி மோசடி செய்த கும்பல்: கோவை நபர் உள்பட 7 பேர் கைது, 20 ஆயிரம் இ சிம்கள் பறிமுதல்

புதுடெல்லி: நாடு முழுவதும் ஆன்லைன் மோசடி, டிஜிட்டல் மோசடி அதிகரித்து வருவதை தொடர்ந்து டெல்லி காவல் துறையின் உளவுத்துறை துணை ஆணையர் வினீத் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிறப்பு விசாரணை நடத்தப்பட்டது. அதில் இந்த மோசடிக்குப் பின்னணியில் இருந்த கும்பலுக்கு சீனா, நேபாளம், கம்போடியா, தைவான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் தொடர்புகள் இருந்தது தெரிய வந்தது.

அதை தொடர்ந்து ஆன்லைன் மோசடி செய்வதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை வைப்பதற்காக ஒரு அறையை வாடகைக்கு எடுத்திருந்த சஷி பிரசாத் என்பவரை முதற்கட்டமாக அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் மூலம் காவல்துறை டெல்லியை சேர்ந்த பர்மிந்தர் சிங் என்பவரை பிடித்தனர். அவரும் சஷி பிரசாத்தும் டிரைவர்கள்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் டெல்லி மற்றும் மொஹாலியில் சிம் பாக்ஸ் செயல்பாடுகளை அமைத்ததாகக் கூறப்படும் தைவான் நாட்டைச் சேர்ந்த சுங் சென் என்பவரை கைது செய்தனர். இவருக்கு பாகிஸ்தானை சேர்ந்தவர் உதவியது தெரிய வந்தது. மொஹாலியில் இருந்து மீட்கப்பட்ட ஒரு சிம், பாகிஸ்தானிய நிறுவனமான பெமாவுடன் இணைக்கப்பட்ட ஐஎம்இஐ எண்ணைக் காட்டியது. மற்றொரு சிம் பாக்ஸ் நிறுவப்பட்டிருந்த தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் இதே போன்ற மோசடி கும்பல் செயல்படுவது தெரிய வந்தது.

முன்னதாக, தமிழ்நாடு காவல்துறை டெல்லியில் உள்ள நிஹால் விஹார் மற்றும் நரேலா ஆகிய இடங்களில் இருந்து இதே போன்ற சிம் பாக்ஸ் சாதனங்களை மீட்டெடுத்திருந்தது, இது இந்த நடவடிக்கையின் வீச்சைக் காட்டுகிறது. இந்த நடவடிக்கையில் சரப்ஜித் சிங், ஜஸ்பிரீத் கவுர், தினேஷ் மற்றும் சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ பெற்ற அப்துல் சலா ஆகிய மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சட்டவிரோத சிம் பாக்ஸ் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி ரூ. 100 கோடிக்கு மேல் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதுவரை ஒரு தைவான் நாட்டவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர. மேலும் டெல்லி, மொஹாலி. மும்பையில் இருந்து சிம் பாக்ஸ்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கும்பலிடம் இருந்து அதிகாரிகள் இதுவரை 20,000 இ-சிம்களையும் 120 சாதாரண சிம் கார்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

* மோசடிக்கு 21,000 சிம்கார்டு விற்பனை வோடாபோன் நிறுவன மேலாளர் கைது
டெல்லியில் ஆன்லைன் மோசடிக்கு 21,000 சிம்கார்டுகளை விற்பனை செய்த வோடாபோன் நிறுவனத்தின் டெல்லி மேலாளரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, ஜார்க்கண்ட், அரியானா போன்ற மாநிலங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் ரெய்டு நடத்தி, டிஜிட்டல் கருவிகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர மோசடிக்கு உடந்தையாக வோடபோன் நிறுவனத்தின் டெல்லி மேலாளர் பினு வித்யாதரன் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் நேற்று அவரை கைது செய்தனர். அவர் சுமார் 21,000 சிம்கார்டுகளை இந்த மோசடி கும்பலுக்கு வழங்கி உள்ளார்.

* சிம் பாக்ஸ் என்றால் என்ன?

* சிம் பாக்ஸ் என்பது பல சிம் கார்டுகள் அல்லது இ-சிம்களை தொலைவிலிருந்து இயக்க அனுமதிக்கும் ஒரு சாதனமாகும்.

* இது இணைய மோசடியின் ஆரம்ப கட்டங்களில் அழைப்புகளின் மூலத்தை மறைக்க பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

* பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் பரிசு: பிளேபாய் கும்பல் கைது
அகில இந்திய கர்ப்ப வேலை மற்றும் பிளேபாய் சேவை என்ற பெயர்களில் செயல்பட்டு வந்த ஒரு கும்பல், குழந்தை இல்லாத பெண்களை கருத்தரிக்கச் செய்து லட்சக்கணக்கில் பணம் பெறுங்கள் என்று ஆசை காட்டி இந்தியா முழுவதும் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் உள்பட ஆன்லைன் மூலம் மோசடி செய்துள்ளது.

குழந்தை இல்லாத பெண்களுடன் பாலியல் உறவு கொண்டு அவர்களைக் கருத்தரிக்கச் செய்வதற்கு ஈடாக ரூ.10 லட்சம் வெகுமதி அளிப்பதாகவும், அத்துடன் வேலைகள் மற்றும் மலிவான கடன்களை வழங்குவதாகவும் கவர்ச்சி விளம்பரம் செய்தது. இதை உண்மை என நம்பிய சபல ஆண்கள் நூற்றுக்கணக்கானோர் நாடு முழுவதிலும் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர்.

அவர்களிடம் பதிவு, ஓட்டல் கட்டணங்கள் மற்றும் பலவற்றிற்காக முதலில் பணம் செலுத்துமாறு கேட்கப்பட்டது. மேலும் சில பெண்களின் படங்களையும் அனுப்பி, விரும்பிய பெண்களை அவர்கள் தேர்வு செய்யும் வாய்ப்பு இருப்பது போன்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டது. இதையும் உண்மை என நம்பிய இளைஞர்கள் வரிந்து கட்டி பணம் கட்டினர். அதன்பின் எந்த தொடர்பும் இல்லாமல் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.

இந்த புகார் தொடர்பாக பீகாரில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒன்பது மொபைல் போன்கள் மற்றும் ஒரு பிரிண்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 18 பேரை தேடி வருகிறார்கள். இருப்பினும், குற்றவாளிகளைத் தேடுவதை விட, பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதுதான் மிகவும் கடினமான காரியம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: