14ம் தேதி மகரவிளக்கு பூஜை திருவாபரண ஊர்வலம் நாளை புறப்படுகிறது: கட்டுக்கடங்காமல் குவியும் பக்தர்கள்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு காலம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. வரும் 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், அன்று மாலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்ப விக்ரகத்தில் திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கமாகும். இந்த திருவாபரணம் பந்தளத்தில் உள்ள தேவசம் போர்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வருட திருவாபரண ஊர்வலம் நாளை (12ம் தேதி) மதியம் 1 மணிக்கு புறப்படுகிறது. பந்தளம் மன்னர் குடும்பத்தின் பிரதிநிதியான நாராயண வர்மா தலைமையில் இந்த ஊர்வலம் நடைபெறுகிறது. 14ம் தேதி மாலை 6.30 மணியளவில் திருவாபரணம் சன்னிதானத்தை அடையும். பின்னர் இந்த திருவாபரணம் ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். இந்த சமயத்தில் தான் பொன்னம்பலமேட்டில் 3 முறை மகரஜோதி தெரியும்.

மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. மகரவிளக்கு பூஜை தினத்தன்று சபரிமலையில் நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பக்தர்கள் வருகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 13ம் தேதி 35 ஆயிரம் பேருக்கும், 14ம் தேதி 30 ஆயிரம் பேருக்கும் மட்டுமே ஆன்லைன் மூலம் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு இந்த நாட்களில் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று போலீஸ் அறிவித்துள்ளது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

* இன்று பேட்டை துள்ளல்
மகரவிளக்கு பூஜைக்கு முன்னோடியாக எருமேலியில் பிரசித்தி பெற்ற பேட்டை துள்ளல் நடைபெறுவது வழக்கமாகும். இவ்வருட எருமேலி பேட்டை துள்ளல் இன்று நடைபெறுகிறது. இன்று நண்பகல் 12 மணியளவில் முதலில் அம்பலப்புழா குழுவினரும், அதன் பின்னர் ஆலங்காடு குழுவினரும் பேட்டை துள்ளல் நடத்துவார்கள்.

Related Stories: