அனைத்து தேர்வு மையங்களிலும் யுபிஎஸ்சி தேர்வர்களுக்கும் முக அங்கீகார சோதனை: தேர்வாணையம் அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் பங்கேற்கும் அனைத்து தேர்வர்களும் தேர்வு மையங்களில் முக அங்கீகார சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்) மற்றும் இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரிகள் உள்ளிட்டோரைத் தேர்ந்தெடுப்பதற்கான குடிமைப் பணிகள் தேர்வு உட்பட, அரசுப் பணிகளுக்கான பல்வேறு ஆட்சேர்ப்புத் தேர்வுகளை யுபிஎஸ்சி நடத்துகிறது.

2025 செப்டம்பர் 14 அன்று நடைபெற்ற என்டிஏ (தேசிய பாதுகாப்பு அகாடமி) மற்றும் என்ஏ (கடற்படை அகாடமி) II தேர்வு, சிடிஎஸ் (ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள்) II தேர்வு ஆகியவற்றின் போது, ​ விரைவான மற்றும் பாதுகாப்பான தேர்வர் சரிபார்ப்புக்காக, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முக அங்கீகார தொழில்நுட்பத்தை சோதிக்கும் ஒரு முன்னோடித் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இந்த திட்டம் குருகிராமில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் மேற்கொள்ளப்பட்டது. அங்கு தேர்வர்களின் முகப் படங்கள், அவர்கள் பதிவுப் படிவங்களில் சமர்ப்பித்த புகைப்படங்களுடன் டிஜிட்டல் முறையில் ஒப்பிடப்பட்டன. இந்த புதிய அமைப்பு, ஒரு தேர்வாளருக்கான சரிபார்ப்பு நேரத்தை சராசரியாக 8 முதல் 10 வினாடிகளாகக் குறைத்தது.

இது நுழைவு செயல்முறையை கணிசமாக எளிதாக்கியதுடன், கூடுதல் பாதுகாப்பு அடுக்கையும் சேர்த்தது என்று யுபிஎஸ்சி தலைவர் அஜய் குமார் கூறியிருந்தார். இதை தொடர்ந்து யுபிஎஸ்சி நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் முக அங்கீகார சோதனை நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்வு செயல்முறையின் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: