திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் முக்கிய திருப்பமாக மூத்த தந்திரி கண்டரர் ராஜீவரர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தங்கம் திருட்டு தொடர்பாக சில விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று திருவனந்தபுரத்திற்கு வரவழைத்து போலீசார் கைது செய்தனர். குற்றப்பிரிவு அலுவலகத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதன் பின்னர் மருத்துவ பரிசோதனை நடத்தி நேற்று முன்தினம் இரவில் கொல்லம் விஜிலன்ஸ் நீதிமன்றத்தில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து தந்திரி கண்டரர் ராஜீவரரை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவரை போலீசார் திருவனந்தபுரம் சிறையில் அடைத்தனர். தங்கம் திருட்டு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
இதில் தற்போது ஒரு வழக்கில் தந்திரி 13வது நபராக சேர்க்கப்பட்டுள்ளார். விரைவில் அடுத்த வழக்கிலும் இவர் சேர்க்கப்படுவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் போலீசின் ரிமாண்ட் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வெளியாகியுள்ளன. சபரிமலை கோயிலில் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட விவரம் அனைத்தும் தந்திரிக்கு நன்றாகவே தெரியும்.
ஆனாலும் அவற்றை செம்புத் தகடுகள் என்று போலி ஆவணம் தயாரித்துக் கொண்டு செல்லும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இவர் மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளார். சபரிமலை கோயிலுக்கு சொந்தமான எந்தப் பொருளையும் வெளியே கொண்டு செல்லக்கூடாது என்பது தந்திரிக்கு தெரியும்.
ஆனாலும் இங்கிருந்து கதவு, நிலை ஆகியவற்றில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகளை வெளியே கொண்டு செல்ல அவர் உடந்தையாக இருந்துள்ளார். இதன் மூலம் சபரிமலை ஆச்சார விதிமுறைகளை மீறுவதற்கு அவர் துணை போய் உள்ளார்.
தன்னுடைய அனுமதி இல்லாமல் தங்கத் தகடுகளை உண்ணிகிருஷ்ணன் போத்தி கொண்டு சென்றிருந்தால் அதற்கு எதிராக தந்திரி தேவசம்போர்டில் புகார் செய்திருக்க வேண்டும். அதையும் அவர் செய்யவில்லை. இவ்வாறு ரிமாண்ட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தந்திரியின் வீட்டில் சோதனை
தந்திரி கண்டரர் ராஜீவரரின் வீடு ஆலப்புழா மாவட்டம் செங்கணூரில் உள்ளது. இந்நிலையில் நேற்று தந்திரியின் வீட்டில் சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடி சோதனை நடத்தியது. டிஎஸ்பி தலைமையில் ஒரு பெண் போலீஸ் உள்பட 8 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். நேற்று பிற்பகல் 2.50 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை இரவு வரை நீடித்தது.
* சிறையில் திடீர் உடல்நலக்குறைவு
தங்கம் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட தந்திரி கண்டரர் ராஜீவரர் நேற்று முன்தினம் நள்ளிரவில் திருவனந்தபுரம் சிறப்பு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று காலை அவருக்கு சிறையில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. போலீசார் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது ரத்த அழுத்தம் அதிகரித்திருந்தது தெரியவந்தது.
சர்க்கரை நோயும் அவருக்கு இருந்ததால் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் ரத்த அழுத்தம் குறையாததால் உடனடியாக தந்திரியை திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
