லக்னோ: லக்னோவில் சக பெண் மருத்துவரைத் திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்து மதம் மாற வற்புறுத்திய மருத்துவரைத் தலைமறைவாக இருந்த நிலையில் போலீசார் கைது செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் (கேஜிஎம்யு) ரமீசுதீன் நாயக் (31) என்பவர் நோயியல் துறையில் இளநிலை உறைவிட மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இவர் தன்னுடன் பணியாற்றிய ஜூனியர் பெண் மருத்துவரிடம், தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்துத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
பின்னர் அவரைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், மதம் மாறினால்தான் திருமணம் செய்வேன் என்று கட்டாயப்படுத்தியதாகவும், மறுத்தால் தனிப்பட்ட அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக கடந்த டிசம்பர் 23ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்த ரமீசுதீனைப் பிடிக்க ரூ.50,000 வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று லக்னோ ரயில் நிலையம் அருகே அவரைப் போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
விசாரணையில், ஆக்ராவைச் சேர்ந்த மருத்துவ மாணவி உட்பட 15க்கும் மேற்பட்ட பெண்களை இவர் இதே பாணியில் ஏமாற்றி மிரட்டியது தெரியவந்துள்ளது. முன்னதாக, இவருக்கு உடந்தையாக இருந்த இவரது பெற்றோர் சலீமுதீன் மற்றும் கதீஜா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பல்கலைக்கழக விசாரணைக் குழுவும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்துள்ளதால், அவரது பதவியைப் பறிக்கவும், மருத்துவப் படிப்பை ரத்து செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர் மீது மதமாற்றத் தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குபதியப்பட்டுள்ளது.
