தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்க: ஒன்றிய பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

டெல்லி: தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற ஒன்றிய அரசின் பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு; சென்னை மெட்ரோ திட்டத்துக்கு ஒன்றிய அரசின் பங்குத் தொகையான ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும். மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களை மறுபரிசீலனை செய்து ஒன்றிய அரசு ஒப்புதல் தர வேண்டும்.

தமிழ்நாட்டின் மொத்த ஏற்றுமதி வர்த்தகத்தில் 31 சதவிகிதம் அமெரிக்காவுடன் நடைபெறுகிறது. அமெரிக்க வரியால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு வரிச் சலுகை வழங்க வேண்டும். ஜவுளித்துறைக்கான பிரத்யேக ஆதரவு தொகுப்பை அறிவித்திட ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் விநியோகத் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் தர வேண்டும். 2024-25, 2025-26ல் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் ரூ.3,548 கோடியை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்.

ஜிஎஸ்டி சீரமைப்பினால் நடப்பு நிதியாண்டில் மட்டும் தமிழ்நாட்டுக்கு ரூ.10,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். மாநில அரசுகள் எதிர்கொள்ளும் வருவாய் இழப்பை குறைக்கும் வகையில் இழப்பீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் பங்கான ரூ.3,112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும். திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி -ஒசூர் புதிய இருப்புப்பாதை வழித்தடத்துக்கு அனுமதி தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: