கூட்டணியில் அன்புமணி வந்தது எப்படி? திருச்சியில் ஸ்கெட்ச் போட்ட அமித்ஷா; டெல்லி கையில் மொத்த குடுமி; ஒரே போனில் முடிந்த டீலிங் ; ‘கப்சிப்’னு அடங்கிய எடப்பாடி

திருச்சி: அன்புமணியை கூட்டணிக்குள் கொண்டு வர அமித்ஷா திருச்சியில் போட்ட ஸ்கெட்ச்தான் என்று தகவல் வெளியாகி உள்ளது. மொத்த குடுமியையும் கையில் எடுத்து உள்ள டெல்லி, ஒரே போனில் டீலிங்கை முடித்ததால் எடப்பாடி அதிர்ச்சியடைந்து உள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. தேர்தலை சந்திக்க கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த நிலையில், புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக திருச்சிக்கு கடந்த 4ம் தேதி வந்தார். அன்றைய தினம் புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். அங்கு பாஜவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் 2 மணி நேரத்துக்கும் மேலாக அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

அதில், கூட்டணி அமைப்பதில் அதிமுக மெத்தனமாக செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தால் சில கட்சிகள் கூட்டணிக்குள் வராமல் இருக்க கூடிய நிலை உள்ளது என்று பாஜ நிர்வாகிகள் குற்றச்சாட்டுகளை அடுக்கினர். இதையடுத்து, ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியை திருச்சிக்கு வருமாறு உத்தரவிட்டாராம். அதன்படி, எஸ்.பி.வேலுமணி திருச்சிக்கு வந்து அமித்ஷாவை இரண்டு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை செல்போனில் தொடர்பு கொள்ளுமாறு அமித்ஷா கூறினார்.

அதன்படி, தமிழக பாஜ நிர்வாகி ஒருவர், தனது செல்போனில் எடப்பாடியை தொடர்பு கொண்டார். பின்னர் அந்த அழைப்பை ஸ்பீக்கரில் போட்டுள்ளார். அப்போது அமித்ஷா பேசியதை, எடப்பாடிக்கு தமிழில் மொழி பெயர்த்து கூறப்பட்டது. அதில், ‘அதிமுக, பாஜ கூட்டணியில் யார் யாரை சேர்க்க வேண்டும், எவ்வளவு சீட் ஒதுக்க வேண்டும், சில கட்சிகளுக்கு குறைந்தளவு சீட் ஒதுக்கி ராஜ்யசபா சீட் கொடுத்தால் போதுமானது உள்ளிட்ட விஷயங்களை நான் பார்த்து கொள்கிறேன். நான் சொல்வதை மட்டும் நீங்கள் செய்தால் போதும்’ என்று அமித்ஷா கூறியதாக கூறப்படுகிறது. மேலும் அன்புமணி உங்களை சந்தித்து கூட்டணி குறித்து பேசுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அன்புமணிக்கு போன் செய்து, ‘நீங்கள் கூட்டணிக்கு வாருங்கள். உங்களுக்கு தேவையானதை செய்து தருகிறோம்’ என்று அமித்ஷா தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்பேரில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, அன்புமணி நேற்று காலை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக கூட்டணியில் பாமக இணைவது உறுதியானது. இதில் அன்புமணி தரப்பினருக்கு 17 சீட் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக உறுதியளிக்கப்பட்டதாக தெரிகிறது.

மேலும், அதிமுக, பாஜ கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ்சை சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் ஓபிஎஸ்சுக்கு அதிமுகவில் முக்கிய பதவி கொடுக்க மாட்டேன் என்று அடம் பிடித்து வருவது தொடர்பாக அமித்ஷா கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் வேலுமணியை தொடர்பு கொண்டு உடனடியாக டெல்லிக்கு வருமாறு அமித்ஷா உத்தரவிட்டார். அதன்படி அமித்ஷாவை சந்திக்க வேலுமணி டெல்லிக்கு சென்று விட்டார். இவரை தொடர்ந்து எடப்பாடியும் டெல்லிக்கு சென்றுள்ளார்.

இது குறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில்,‘‘அதிமுக பொது செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா காலத்தில் தேர்தலின்போது யாருடன் கூட்டணி அமைப்பது, யாருக்கு எவ்வளவு சீட்டு கொடுப்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் ஜெயலலிதாதான் முடிவெடுப்பார். ஆனால் எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொது செயலாளராக வந்தபிறகு இந்த நிலை தலைகீழாக மாறி விட்டது. அதிமுக யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை டெல்லி பாஜவே முடிவெடுத்து வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக என்ன செய்ய வேண்டும், யாருடன் கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், யாருக்கு எவ்வளவு சீட் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் அமித்ஷாவே நேரடியாக களத்தில் இறங்கி செய்து வருகிறார்.

அமித்ஷாவின் குரலாக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். இது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை. அமித்ஷா நினைத்ததை அதிமுக மூலம் சாதித்து வருகிறார். தேர்தலுக்கு முன்பே அமித்ஷா கட்டுப்பாட்டில் அதிமுக உள்ளது. தேர்தலுக்கு பிறகு என்ன நடக்கும் என்று தெரியவில்லை. டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து அமித்ஷா முக்கிய முடிவு எடுத்துள்ளதாகவும், அதை வரும் பொங்கலுக்குள் செய்து முடிக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமியிடம் கண்டிப்புடன் கூற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது’ என்றனர். அமித்ஷாவின் இந்த அதிரடி நடவடிக்கைகள் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* பிடி கொடுக்காத தேமுதிக
கடந்த முறை அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து போட்டியிட்டது. அப்போது, ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக உறுதி அளித்ததாக தெரிகிறது. ஆனால், உறுதி அளித்தப்படி ராஜ்யசபா சீட் தரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தேமுதிக, வரும் சட்டமன்ற தேர்தலில் கவனமாக கையாள முடிவு செய்துள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வாருங்கள் என்கூறி விட்டு சென்றுள்ளாராம். இதையடுத்து, அதிமுக தரப்பில் இருந்து தேமுதிகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். தேமுதிகவுக்கு குறைந்த தொகுதிகளை கொடுப்பதுடன் ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த முறையும் ஏமாந்து விடக்கூடாது என்பதால், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து கூறுவதாக பிடி கொடுக்காமல் தேமுதிக உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: