புதுடெல்லி: தமிழ்நாட்டில் இருக்கும் பரபரப்பான அரசியல் சூழலில் இரண்டு நாள் அரசியல் பயணமாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இரவு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து நேற்று காலை அவர் டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அமித்ஷாவுடன் தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இன்னும் நிறைய கட்சிகள் எங்கள் கூட்டணியில் சேர இருக்கிறது. அமித்ஷாவின் சந்திப்பின் போது தொகுதி பங்கீடு குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை. எந்தெந்த கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் இருக்கிறது என்பது குறித்து தற்பொழுது வெளிப்படையாக சொல்ல முடியாது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோருக்கு எங்களது கட்சி மற்றும் கூட்டணியில் இடமில்லை. அதேபோன்று, அதிமுகவில் அவர்களை இணைக்கும் பேச்சுக்கே இடம் கிடையாது. ஏனென்றால் அவர்கள் அனைவரும் முடிந்து போன விஷயமாகும். இதனை நாங்கள் பலமுறை தெளிவுப்படுத்தி விட்டோம்.
குறிப்பாக எங்களது உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று முதன் முதலாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தின் போதே அமித்ஷா திட்டவட்டமாக எங்களிடம் தெரிவித்து விட்டார். எனவே அதில் எந்தவித சந்தேகமும் தற்போது கிடையாது. மேலும் எக்களது கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை வகிக்கும். ரகசியமாக நடந்தால் தான் அரசியல் கட்சிகளுக்கு என்று அந்தஸ்து உண்டு. அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம். விரைவில் அனைத்தும் நல்ல முறையாக அமையும். இவ்வாறு அவர் கூறினார். இதில், அதிமுக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைவாரா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, ‘‘எங்கள் கூட்டணி இன்னும் வலுவாகும். அது நடைபெறும் பொழுது உங்கள் அனைவரையும் அழைத்து சொல்வேன்’’ என்று எடப்பாடி பழனிசாமி மழுப்பலாக பதிலளித்து விட்டு சென்றார்.
