56 தொகுதிகள், 3 அமைச்சர் பதவி கேட்கும் அமித்ஷா?.. எடப்பாடி பழனிசாமியை நாளை சந்திக்கிறார் நயினார் நாகேந்திரன்

 

சென்னை: அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியை நாளை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் (ஜன.9) சந்திக்கிறார். என்.டி.ஏ. கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது என்பதை காட்ட தீவிர முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. அண்மையில் திருச்சி வந்த அமித் ஷாவிடம் அதிமுக – பாஜக கூட்டணி வலிமை குறைந்து கொண்டே போவதாக உள்ளூர் நிர்வாகிகள் கூறியுள்ளனர். கூட்டணி வலிமை குறைவதாக பாஜகவினர் கூறியதை அடுத்து புதிய கட்சிகளை சேர்க்க அமித் ஷா தீவிரம் காட்டி வருகிறார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் சேர அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. நாளை டிடிவி தினகரன் டெல்லி வந்து அமித் ஷாவை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி இம்மாத இறுதியில் தமிழகம் வரும் நிலையில், கூட்டணியை இறுதி செய்ய பாஜக மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியை நாளை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் (ஜன.9) சந்திக்கிறார்.

டெல்லியில் அமித் ஷா சந்தித்துவிட்டு கே.பழனிசாமி திரும்பிய நிலையில் நாளை நயினார் சந்தித்து பேசுகிறார். தே.ஜ. கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்து பேசப்பட வாய்ப்பு உள்ளது. தொகுதி பங்கீட்டை இறுதி செய்வது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆட்சியில் பங்கு கேட்கும் பாஜக
இதனிடையே டெல்லியில் அமித் ஷா -எடப்பாடி பழனிசாமி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நடந்த சந்திப்பின்போது ஆட்சியில் பாஜகவுக்கு பங்கு தர வேண்டும் என எடப்பாடியிடம் அமித் ஷா வலியுறுத்தி உள்ளார். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 56 தொகுதிகள் ஒதுக்கவும் எடப்பாடியிடம் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். அமித் ஷாவின் கோரிக்கையை உடனடியாக ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசிய பிறகே முடிவெடுக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஏற்பது கூட்டணியின் வெற்றியை பாதிக்கும் என எடப்பாடி கூறியதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டு மக்களும் கூட்டணி ஆட்சியை ஏற்க மாட்டார்கள் என்றும் கூறியதாக கூறப்படுகிறது.

Related Stories: