3 ஆக உடையும் பாமக: காடுவெட்டி குரு மகள் இன்று புதுக்கட்சி துவக்கம்; ராமதாஸ் – அன்புமணி மோதலில் ஒதுங்கி நிற்கும் நிர்வாகிகளுக்கு குறி

சேலம்: பாமகவில் ராமதாஸ்-அன்புமணி தரப்பினர் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், சேலத்தில் புதிய கட்சி தொடக்கம் என்ற காடுவெட்டி குரு மகளின் அறிவிப்பு, புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு, கட்சியை இரண்டாக உடைத்துள்ளது. இவர்களின் மோதல் களம் என்பது, பெரும்பாலும் சேலம், தர்மபுரி மாவட்டங்களை முன்வைத்தே நகர்கிறது. இந்த சூழ்நிலையில், மறைந்த காடுவெட்டி குருவின் மகள் வெளியிட்டுள்ள புதிய கட்சி குறித்த அறிவிப்பு, பாமக தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை, இன்று (9ம்தேதி) சேலம் மாவட்டம், ஓமலூரில் புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து சேலம், தர்மபுரி மாவட்டங்களில் 50 நாட்கள் சுற்றுப்பயணம் செய்வதோடு, வரும் 22ம் தேதி, தர்மபுரியில் கட்சியின் மாநாடு நடத்துவேன் என்றும் அறிவித்துள்ளார். இவை அனைத்திற்கும் மேலாக சமூகநீதியை முன்வைத்து வன்னியர் சங்கம் உருவாக்கப்பட்டது. அதற்கு கடைசி வரை உறுதியாக இருந்து உண்மையாக உழைத்தார் எனது தந்தை காடுவெட்டி குரு. ராமதாஸ் தனது மகன் மீதான பாசத்தால், கட்சி கொள்கையில் இருந்து வெளியே வந்தார்.

தனது மகனுக்காக சமுதாயத்தை பின்தங்கிய நிலைக்கு கொண்டு சென்றார். தந்தையும், மகனும் சண்டை போட்டுக்கொண்டு சமுதாயத்தை பின் தங்கிய நிலையில் வைத்துள்ளனர். அவர்களின் சூழ்ச்சிகளை எல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்வேன். சிறப்பான கூட்டணி அமைப்பேன் என்பது அவர் விடுத்துள்ள ஸ்டேட்மென்ட். விருதாம்பிகையின் இந்த அறிவிப்பு, வன்னிய சமூக மக்கள் அதிகம் நிறைந்த சேலம், தர்மபுரி மாவட்டங்களில் புதிய புயலை கிளப்பியுள்ளது. 80 சதவீதம் வன்னிய மக்கள் நிறைந்த ஓமலூர் தொகுதியில், புதிய கட்சி என்ற அவரது அறிவிப்பு, ராமதாஸ்-அன்புமணி ஆதரவாளர்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.

தந்தையும்-மகனும் எதிரெதிர் துருவங்களாக நின்று மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர். இதில் மகன் கூட்டணி ஒப்பந்தம் வரை சென்று விட்டார். அடுத்து தந்தையின் நகர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, ‘தந்தை-மகன் மோதலை, நாம் நிரந்தரம் என்று கருத முடியாது. இவர்களின் மோதலில் இருபிரிவுகளாக இருந்து சிரமப்படுவதை விட, கட்சி பணிகளில் இருந்தும் விலகலாம்’ என்ற நிலையில் சில மூத்த நிர்வாகிகள் உள்ளனர். அவர்களை குறி வைத்து, காடுவெட்டி குருவின் மகள் அழைப்பு விடுத்துள்ளார்.

இதை ஏற்று சேலம்-தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள், ஓரங்கட்டப்பட்ட நிர்வாகிகள் சிலர், அவரது கட்சியில் இணைய முடிவு செய்துள்ளனர். அதே போல், இந்த மாவட்டங்களில் காடுவெட்டி குருவின் தீவிர ஆதரவாளர்கள் பலர் உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், ஏற்கனவே இரண்டாக பிரிந்து நிற்கும் பாமகவிற்கு காடுவெட்டி குரு மகளின் அறிவிப்பு, புதிய தலைவலியாகவே இருக்கும் என்கின்றனர் உள்ளூர் நிர்வாகிகள்.தந்தை, மகன் மோதலால் ஏற்கனவே பாமக இரண்டாக உடைந்து உள்ள நிலையில், புதிதாக கட்சி தொடங்கும் காடுவெட்டி குரு மகள் பாமக நிர்வாகிகளுக்கு குறி வைத்து உள்ளதால் பாமக 3 ஆக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: