பாமகவை உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை அதிமுக-அன்புமணி கூட்டணி தெருக்கூத்து நாடகம்: அவர் ஒரு மோசடி பேர்வழி; நான் அமைப்பதே கூட்டணி; ராமதாஸ் பரபரப்பு பேட்டி

திண்டிவனம்: பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே அதிகார மோதல் ஏற்பட்டு கட்சி இரண்டாக உடைந்து உள்ளது. பனையூரில் இருந்த கட்சியை நடத்தி வரும் அன்புமணி நேற்று முன்தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்தார். இது ராமதாஸ் தரப்பை அதிர்ச்சியடைய செய்தது. அன்புமணி கூட்டணி அறிவித்திருப்பது சட்ட விரோதம் என்றும் கட்சி விதிப்படி தான் மட்டுமே கூட்டணி பேச உரிமை உள்ளவர் என்றும் ராமதாஸ் பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று அளித்த பேட்டி: ஒரு நபர் (அன்புமணி) ஒரு கட்சியோடு பேசி ஒப்பந்தம் போட்டாரா, கையெழுத்து போட்டாரா எனக்கு தெரியாது. அது பரபரப்பான செய்தியாக வந்திருக்கிறது. பாமகவை பொறுத்தவரையில் நான் ஆரம்பித்த கட்சி. தனிமனிதனாக ஆரம்பித்த கட்சி. இதற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியோ, உரிமையோ இல்லை. ஒருவனை நான் செய்த சத்தியத்தை மீறி அமைச்சராக, தலைவராக ஆக்கினேன். ஆனால் அவன் எனக்கே வேட்டு வைப்பான் என்று அப்போது தெரியாது.

ஆனாலும் இன்றைக்கு அவன் செய்த தில்லுமுல்லு எல்லாம் தெரிந்தபிறகு நிர்வாக குழு, செயற்குழு, பொதுக்குழு ஆகிய எல்லா மூத்த தலைவர்களும் இணைந்து இனி அவனை கட்சியில் வைத்திருக்க முடியாது என்று முடிவு செய்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது உங்களுக்கு தெரியும். நீக்கியதற்கு பிறகும் அவதூறாக பேசுவது, விமர்சனங்கள் செய்வது, ஒரு கோஷ்டியை வைத்துக் கொண்டு செயல்படுவது என தமிழ்நாட்டு அரசியலில் இதுவரை இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது இல்லை என்று சொல்லுகின்ற அளவிற்கு நடந்து கொள்கின்றான்.

கட்சியின் தலைமை பதவியை கொடுத்தேன். ஆனால் என்னிடமிருந்து கட்சியை பறிப்பதற்கு சதி திட்டம் தீட்டி சூழ்ச்சியோடு செயல்பட்டதை நீங்கள் அறிவீர்கள். தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தவாறும் நீதிமன்ற தீர்ப்பின்படியும் அன்புமணி பாமகவில் இல்லை. இவனுக்கு தலைமை பண்பு கொஞ்சம்கூட இல்லை என்பதால் செய்ய வேண்டியதுதாயிற்று. ஆக கட்சி என்னிடம்தான் உள்ளது. அதற்கு ஆதாரம் நடந்த நிர்வாக குழு, செயற்குழு, பொதுக்குழு. பாமகவை பொறுத்தவரை தொண்டர்கள் என்னிடம்தான் இருக்கிறார்கள்.

அவரிடம் சில நபர்கள் பணத்திற்காக ஆசைபட்டு அங்கே ஓடி இருக்கிறார்கள். நான் அவர்களை உருவாக்கி பாசத்தோடு வளர்த்த சிலபேர். யார் பணம் கொடுப்பார்கள் என்று அங்கே ஓடி போட்டோ எடுத்து கொள்கிறார்கள். அது ஒரு பக்கம். ஆனால் அன்புமணியின் துரோகத்தை கட்சியில் எல்லோரும் புரிந்து கொண்டார்கள். கட்சிக்கு அப்பாற்பட்ட பொதுமக்களும் புரிந்து கொண்டார்கள். அன்புமணி எங்கே யாரை நிறுத்தினாலும் அவர்களுக்கு பாமகவினர் மட்டுமல்ல மற்றவர்களும் ஓட்டு போட மாட்டார்கள்.

ஏனென்றால் ஒரு தந்தைக்கே துரோகம் செய்த நபரை, தந்தையிடமிருந்து கட்சியை அபகரிக்க நினைத்த இந்த கும்பலுக்கா நாம் ஓட்டு போடுவது என்று நினைத்து ஓட்டுபோட மாட்டார்கள். அன்புமணி வேண்டுமானால் சிவில் நீதிமன்றத்துக்கு போகலாம். இதை டெல்லி உயர்நீதிமன்றமே சொல்லியிருக்கிறது. அதிமுக-அன்புமணி சார்பில் கூட்டணி நேற்று நடந்த ஒரு தெரு கூத்து நாடகம். கூட்டணி பேசுவது நீதிமன்ற அவமதிப்பு. அவர் யார்கூட கூட்டணி பேசினாலும் அது செல்லாது. அன்புமணி ஒரு மோசடி பேர்வழி. அவரிடம் விலைபோய் கூட்டணி அமைப்பார்களா என்பது சந்தேகம்.

என் தலைமையில் தான் கூட்டணி பேச முடியும். நான் அமைக்கின்ற கூட்டணி தான், நான் இருக்கும் கூட்டணி தான், நான் சேரும் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். அதனால் நேற்று நடந்தது ஒரு கூத்து, ஒரு நாடகம். இந்த நாடகத்தை தமிழ்நாட்டு மக்கள் பார்த்து ஏன் இப்படி பிள்ளை, தந்தைக்கு எதிராக இப்படி செய்கிறார். எப்பாடுபட்டு அவரை படிக்க வைத்தார், மந்திரி ஆக்கினார், ராஜ்யசபா கொடுத்தார், தலைமை பொறுப்பையும் கொடுத்தார். ஆனால் இவ்வளவு கேவலமாக அன்புமணி நடக்கிறார். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்ற சொல்லுக்கேற்றவாறு, தந்தை இருக்கும்வரை அவரே தலைமை தாங்கி இருக்கலாமே என்றும், இப்படி யாரும் செய்யக்கூடாது என்றும் மக்கள் ஆங்காங்கே பேசிக் கொள்வதை நாம் கேட்க முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* அன்புமணி ஒரு மோசடி பேர்வழி. அவரிடம் விலைபோய் கூட்டணி அமைப்பார்களா என்பது சந்தேகம்.
* அன்புமணி எங்கே யாரை நிறுத்தினாலும் அவர்களுக்கு பாமகவினர் மட்டுமல்ல மற்றவர்களும் ஓட்டு போட மாட்டார்கள்.
* ஏனென்றால், ஒரு தந்தைக்கே துரோகம் செய்த நபரை, தந்தையிடமிருந்து கட்சியை அபகரிக்க நினைத்த இந்த கும்பலுக்கா நாம் ஓட்டு போடுவது என்று நினைத்து ஓட்டுபோட மாட்டார்கள்.
* அதிமுக-அன்புமணி கூட்டணி பேசுவது நீதிமன்ற அவமதிப்பு. அவர் யார்கூட கூட்டணி பேசினாலும் அது செல்லாது.

* அன்புமணி ஒரு புளுகு
பாமக நிறுவனர் ராமதாசிடம், சி.வி.சண்முகம் உங்களை தொடர்பு கொண்டதாகவும் அவருக்கு நீங்கள் அப்பாயின்மெண்ட் கொடுக்காததால் அன்புமணியிடம் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளதே? என நிருபர்கள் கேட்டதற்கு, ‘தமிழ்நாட்டு அரசியலில் சொல்வார்கள்… அண்ட புளுகு, ஆகாச புளுகு என்று மேடையில் கூறுவார்கள். அதேபோல் அன்புமணி ஒரு புளுகு. ஒன்று ஒன்றாக எடுத்து விடுவார். அதாவது நான் வளர்த்த ஒருத்தனை 4 முறை பொதுச்செயலாளராக ஆக்கினேன். வீட்டிற்கு சென்று துணிமணி எடுத்து வருகிறேன் என்று கூறிச் சென்றவன், அவன் அங்கே போட்டோ எடுக்கிறான்.

இதுமாதிரி காட்சி தமிழ்நாட்டில் நடந்தது கிடையாது. அவர்களிடம் கேளுங்கள், ராமதாஸ் எங்களுக்கு நன்மை செய்தார் என்றுதான் சொல்வார்கள் (அன்புமணி தவிர)’ என்றார்.‘எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் என்று அன்புமணியை கூறுகிறார், அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, ‘இதை அந்த கட்சியில் இருப்பவர்கள் யாரும் அங்கீகாரம் பண்ணவில்லை’ என்றார். அதற்கு, ‘அங்கீகாரம் பண்ணிதானே அதிமுக கூட்டணி வைத்துள்ளார்கள்’ என கேட்டபோது, ‘போக, போகத் தெரியும், 2 நாளில் தெரியும்’ என்று தெரிவித்தார்.

* திமுகவுடன் கூட்டணியா?
‘பாமகவில் உங்கள் தலைமையில் கூட்டணி அமையுமா?’ என்ற கேள்விக்கு, ‘என் தலைமையில் கூட்டணி அமையும் என்று சொல்லக்கூடாது, சொல்லவும் முடியாது. என் கட்சியைவிட வலுவான கட்சிகள் இருக்கு. கூட்டணி என்பது எல்லோரும் சேர்ந்து, நல்ல கட்சிகள் எல்லாம் சேர்ந்து அமைப்பதுதான் ஒரு நல்ல கூட்டணி. பொங்கலுக்குள் கூட்டணி குறித்து அறிவிப்போம்’ என்று ராமதாஸ் பதிலளித்தார். ‘அன்புமணி இடம்பெற்ற கூட்டணியில் நீங்கள் இடம்பெற வாய்ப்பு இருக்கிறதா?’ என்ற கேள்விக்கு, ‘அது இப்போது சொல்லமுடியாது. கட்சியில் இருக்கும் முக்கிய தலைவர்கள் கலந்துபேசி முடிவெடுப்போம்.’ என்றார்.

அன்புமணியை மட்டும் புறக்கணிப்பீர்களா, அதிமுகவையும் புறப்பணிப்பீர்களா? என்ற கேள்விக்கு, ‘இந்த கேள்விக்கெல்லாம் பதில் ஒரு 2 நாளில் கிடைக்கும், காத்திருங்கள்’ என்றார். ‘நல்ல கூட்டணி என்று சொன்னீர்கள், அது திமுகவா, விஜய் கட்சியா?’ என்ற கேள்விக்கு ‘அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். நாங்கள் கூடிபேசி ஒரு முடிவை எடுப்போம். அப்போது சொல்லுகின்றோம். எடப்பாடி பழனிசாமி எங்களிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை’ என்றார்.

* இன்று முதல் விருப்ப மனு
பாமக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என ராமதாஸ் அறிவித்திருந்தார். அதன்படி, தைலாபுரத்தில் விருப்ப மனுக்கள் இன்று முதல் (9ம்தேதி) பெறப்படுகிறது. ஒரு பக்கம் அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி வைத்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி முடித்து (17+1) உள்ளதாக கூறப்படும் நிலையில், ராமதாஸ் சார்பில் பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெற உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: