பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக பாஜ தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தமிழகம் வருகை: சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த திட்டம்

சென்னை: பாஜ தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக நிதின் நபின் நாளை தமிழகம் வருகிறார். அவர் கோவையில் நடைபெறும் பாஜ மையக்குழு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி அடுத்த மாதம் இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜ இடம்பெற்றுள்ளது. மேலும் கூட்டணியில் பாமக (அன்புமணி) இணைந்துள்ளது. மற்ற கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கியுள்ளது.

மெகா கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி கூறி வருகிறார். அதே நேரத்தில் மீண்டும் ஓபிஎஸ், டி.டி.வி.தினகரனை சேர்க்க வாய்ப்பே இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். அதே நேரத்தில் எடப்பாடி தலைமையிலான அணியில் இணைய மாட்டேன் என்று 2 பேரும் கூறியுள்ளனர். அவர்கள் இரண்டு பேரையும் கூட்டணியில் சேர்க்க பாஜ அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த சூழலில் தான் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழகம் வந்தார். அவர் புதுக்கோட்டையில் நடந்த பாஜ கூட்டத்திலும், ரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். மோடி பொங்கல் விழாவிலும் பங்கேற்றார்.

இந்நிலையில் கன்னியாகுமரியில் நடக்கும் தாமரை பெண்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 28ம் தேதி தமிழகம் வர இருக்கிறார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளிடமும் அவர் கலந்துரையாட உள்ளார். தேர்தல் நெருங்கி வருவதால் பாஜ தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள் அடுத்தடுத்து தமிழகம் வர திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே, பாஜவின் தேசிய செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிதின் நபின் 2 நாள் பயணமாக தமிழகத்திற்கு வர உள்ளார். நாளை (சனிக்கிழமை) மாலை அவர் தமிழகம் வர உள்ளார். கோவையில் நடக்கும் கட்சி தொடர்பான நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க உள்ளார்.

தொடர்ந்து 11ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவையில் நடக்கும் பாஜ மைய குழு கூட்டத்திலும் பங்கேற்கிறார். கூட்டத்தில் தமிழக அரசியல் நிலவரம், பாஜ வளர்ச்சி பணிகள், சட்டசபை தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, முன்னாள் தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். நிதின் நபின் தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக தமிழகம் வர இருப்பதால், சிறப்பான வரவேற்பு கொடுக்க பாஜவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Related Stories: