பாடாலூர் அரசுப்பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

பாடாலூர், டிச.22: மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் கல்வி பயில்வதை விட்டு விடக் கூடாது என்ற அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் எவ்வித சிரமமுமின்றி பள்ளிக்கு சென்று வரும் வகையில் ஆண்டுதோறும் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியை மாலதி அனைவரையும் வரவேற்று பேசினார். பெரம்பலூர் எம்எல்ஏ எம்.பிரபாகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வல்லபன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர், அருண், அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பாலச்சந்திரன், துணை தாளாளர் கேசவ் பாலாஜீ, அவைத் தலைவர் ராஜகோபால், ஊராட்சி செயலர் அசோக்ராஜ், ஆசிரியர் ரமேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உதவி தலைமையாசிரியை ஆனந்தி நன்றி கூறினார்.

Related Stories: