புதுக்கோட்டையில் சாலைகள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு

புதுக்கோட்டை, டிச. 22: புதுக்கோட்டையில் கடும் பனிப்பொழிவு, திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் சாலைகளே தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காலை 8.30 மணி வரை கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது.

குறிப்பாக திருச்சி, காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலை, திருக்கோகர்ணம் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் சாலையே தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது. மேலும் இந்த பனிமூட்டத்தால் அந்த சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு மிதமான வேகத்தில் சென்றனர். மேலும் வாகனங்களையே இயக்க முடியாத அளவிற்கு மூடுபனி நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதியும் அடைந்தனர்.இதேபோல் சாலைகளில் நடந்து சென்றவர்கள் கடும் குளிரில் குல்லா அணிந்ததும், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் குளிர் தாங்க முடியாமல் சால்வைகளை வைத்து போற்றிக் கொண்டும் சென்றனர்.

மேலும் காலை நேரத்தில் உடற்பயிற்சிக்காக வாக்கிங் சென்றவர்களும் வழக்கமாக உள்ள பனிப்பொழிவை விட நேற்று அதிகமான பனிப்பொழிவு காணப்படுவதாகவும் அதனால் உடற்பயிற்சிக்காக வாக்கிங் கூட செல்ல முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: