இன்ஜினியரை இரும்பு குழாயில் தாக்கி ஓய்வு ரயில்வே ஊழியர் வீட்டில் நகை திருட்டு

சமயபுரம், டிச.22: சமயபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அப்பாதுறை ஊராட்சியில் தெற்கு சத்திரம், புதுவசந்தம் நகரை சேர்ந்தவர் சன்னாசி (68). ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி இந்திராணி (54). இவரது மகன்கள் கார்த்திக் (37), ஹரிகரன் (35) என்ற இரண்டு மகன்களும், பூர்ணிமா (36) என்ற ஒரு மகளும் உள்ளனர்.

இதில் கார்த்திக் வெளியூரில் வேலை செய்து வருகிறார். பூர்ணிமா திருமணமாகி மாமனார் வீட்டில் வசிக்கிறார்.இந்நிலையில் நேற்று முன்தினம் சன்னாசி வெளியூர் சென்ற நிலையில், அன்று இரவு இந்திராணி மற்றும் இன்ஜினியர் ஹரிகரனும் தனியாக வீட்டில் ஒரு அறையில் தூங்கினர். அப்போது, நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் பின்புற கேட்டை இரும்பு கம்பியால் நெம்பி திறந்த 4 முகமூடி கொள்ளையர்கள், வீட்டின் பூட்டை உடைத்து அறைக்கதவை தட்டினர். அப்போது, எழுந்து கதவை திறந்த ஹரிகரனை இரும்பு கம்பியால் மண்டையில் தாக்கினர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சத்தம் கேட்டு எழுந்த அவரது தாய் இந்திராணி, மகனை விட்டு விடுங்கள் என கதறி தான் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க நகையை கழற்றி கொடுத்தார். இதையடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து இந்திராணி கணவர் சன்னாசிக்கு தகவல் தெரிவித்தார். வீட்டிற்கு வந்த சன்னாசி இதுகுறித்து சமயபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இந்திராணி மற்றும் ஹரிஹரனிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் வந்த நான்கு முகமுடி கொள்ளையர்களும் வடமாநில பாஷை பேசியதாக தெரிவித்தனர். அதன்பின் அப்பகுதி மக்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி அங்குள்ள சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடங்களை சேகரித்தனர். அப்பாதுறை பகுதியில் நள்ளிரவில் வீட்டின் உரிமையாளரை தாக்கி மிரட்டி செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: