முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை வருகை முன்னேற்பாடுகளை கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு வரும் 27ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருவண்ணாமலை, டிச.22: திருவண்ணாமலை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதல்வர் பங்கேற்றும் விழா முன்னேற்பாடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 27ம் தேதி நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேளாண் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார். இதையொட்டி, திருவண்ணாமலை – திருக்கோவிலூர் சாலையில் மாநகராட்சி பள்ளி எதிரில் வேளாண் சங்கமம் கண்காட்சிக்கான அரங்குகள் அமைக்கப்படுகிறது. அதேபோல், திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட மலப்பாம்பாடி பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

எனவே, விழா நடைபெறும் 2 இடங்களிலும் பிரமாண்ட அரங்குகள், மேடை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பயன்பெற உள்ளனர். எனவே, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரங்கத்தில் குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறை வசதிகள், மருத்துவ முகாம்கள் விரிவாக திட்டமிடப்பட்டுள்ளன. அதோடு, பயனாளிகளை அழைத்து வரும் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதியும் செய்யப்படுகிறது. மேலும், விழா நடைபெறும் பகுதிக்கு எளிதில் வந்து செல்ல வசதியாக மூன்று வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதோடு, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், முதல்வர் வருகைக்கான முன்னேற்பாடுகளை கலெக்டர் தர்ப்பகராஜ் நேற்று நேரில் ஆய்வு செய்தார். திருக்கோவிலூர் சாலை பகுதியில் வேளாண் கண்காட்சிக்காக அமைக்கப்படும் அரங்குகள் மற்றும் மலப்பாம்பாடி பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக அமைக்கப்படும் மேடை உள்ளிட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். விழாவுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், விழா முன்னேற்பாடுகளை ஒருங்கிணைக்க நியமிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், பணிகளை விரைந்து முடிப்பதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்றார்.

இந்த ஆய்வின் போது, வேளாண் இணை இயக்குநர் கண்ணகி மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: