நெல்லை, டிச.22: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டலம் சார்பில் மார்கழி மாத ஞாயிற்றுகிழமைகளில் நவ கைலாய கோயில்களுக்கு டிச.21, 28, ஜன.4, 11 ஆகிய 4 நாட்கள் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பஸ்கள் ஞாயிற்றுகிழமைகளில் காலை 6.30 மணிக்கு நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்டு நவ கைலாய கோயில்களான பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் (புன்னக்காயல்) உள்ளிட்ட சிவாலயங்களுக்கு சென்று விட்டு இரவு நெல்லை புதிய பஸ்நிலையம் வந்துசேரும் வகையில் இயக்கப்படுகிறது.
நேற்று மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமையையொட்டி நெல்லை அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாண்மை இயக்குனர் நடராஜன் நவ கைலாய சிறப்பு பஸ்கள் இயக்கத்தை துவக்கி வைத்தார். பொதுமேலாளர்கள் (நெல்லை) சிவகுமார், (தூத்துக்குடி) ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நேற்று காலை நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து 6 பஸ்களில் 300 பயணிகள் நவகைலாய கோயில்களுக்கு புறப்பட்டு சென்றனர். பக்தர்களுக்கு நவகைலாய கோயில்களின் சிறப்பு தகவல்கள் அடங்கிய புத்தகம் மற்றும் பிஸ்கட், தண்ணீர் பாட்டில்கள், மதியம் சாப்பாடு அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன. வரும் நாட்களில் பக்தர்கள் நவ கைலாய கோயில்களுக்கு செல்லும் வகையில் புதிய பஸ்நிலையத்தில் ஜனவரி 10ம் தேதி வரை அனைத்து நாட்களிலும் முன்பதிவு செய்யப்படுகிறது.
இதற்கான கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படுகிறது. இந்த சேவையை பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ள நெல்லை அரசு போக்குவரத்து கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
