தஞ்சாவூர், டிச.22: தஞ்சையில் நேற்று நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு 4,258 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் 2,934 பேர் தேர்வு எழுதினர். 1,324 பேர் தேர்வை எழுதவில்லை. தமிழக காவல்துறையில் காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா) 933, ஆயுதப்படையில் 366 சப்-இன்ஸ்பெக்டர் காலியிடங்கள் என 1,299 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சமீபத்தில் வெளியிட்டது. இதில் 1,299 சப்-இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்களுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர்.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 4,258 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த நிலையில் அவர்களுக்கான தேர்வு நேற்று நான்கு மையங்களில் நடைபெற்றது. தேர்வு காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடந்தது. குறிப்பாக தேர்வர்கள் காலை 8 மணிக்கே மையத்திற்கு வந்தனர். செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர் மற்றும் எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. உயர் போலீஸ் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட்டன.
விண்ணப்பித்திருந்த 4,258 பேரில் 2,934 பேர் தேர்வு எழுதினர்.1324 பேர் தேர்வு எழுதவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்காக 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வர்கள் அனைவரும் உரிய பரிசோதனைக்கு பின்பு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
