செங்கோட்டை: கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க கோரி சமூக அமைப்புகள் நாளை போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்த நிலையில், புளியரை சோதனை சாவடியில் அதிகளவில் பாரங்களை ஏற்றி சட்ட விரோதமாக கனிமங்களை கொண்டு செல்ல முயன்ற 13 லாரிகளுக்கு ரூ.5.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. நெல்ைல, தென்காசி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில் எம்சாண்ட், ஜல்லி கல், கருங்கல் உள்ளிட்ட கனிமவளங்கள் கேரளாவிற்கு ஏற்றி கொண்டு செல்லப்படுகிறது.
இதற்கிடையே தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சட்ட விரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதாக சமூக அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனாலும், தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் கனிம வளங்கள் கேரளாவிற்கு அதிக அளவில் சட்டவிரோதமாக அதிக பாரங்களை ஏற்றிக் கொண்டு செல்வதை கண்டுகொள்ளாமல் இருப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சமீபத்தில் கனிமவளங்களை ஏற்றி கொண்டு ஏராளமான வாகனங்கள் வரிசை கட்டி கேரளாவை நோக்கி செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில் கனிமவளங்கள் கடத்தப்படுவதை கண்டித்து கடையத்தில் நாளையும், செங்கோட்டையில் நாளைமறுநாள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று சமூக அமைப்புகள் அறிவித்து இருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணி முதல் புளியரை சோதனைசாவடியில் செங்கோட்டை மற்றும் புளியரை போலீசார் அடங்கிய குழுவினர் சட்ட விரோதமாக கனிமவளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறதா என்பது தொடர்பாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அதிக அளவு பாரங்களை ஏற்றிக்கொண்டு சட்டவிரோதமாக 13 லாரிகள் கனிமங்களை கொண்டு செல்ல முயற்சியில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ஒவ்வொரு லாரிக்கும் தலா ரூ.25 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை என மொத்தம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோதனைக்கு பயந்து சாலைகளில் வாகனங்கள் நிறுத்தம்
சட்டவிரோதமாகவும், அதிகளவு பாரம் ஏற்றி கொண்டு கனிமங்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்து கனரக லாரிகளை மறித்து சோதனை நடத்தியதன் காரணமாக புளியரை முதல் கடையம் சாலையிலும், ஆலங்குளம் சாலையிலும் பல இடங்களில் ஆங்காங்கே வாகனங்களை ஓட்டுனர்கள் நிறுத்தி வைத்தனர். போலீசாருக்கு பயந்து பல வாகனங்களில் ஓட்டுனர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இதனால், சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.