மெஸ்ஸியை சந்தித்த விவகாரம்: நடிகைக்கு ஆபாச மிரட்டல் விடுத்த பீகார் வாலிபர் கைது

கொல்கத்தா: உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, கடந்த 13ம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு வந்திருந்தார். அப்போது சால்ட் லேக் மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு குளறுபடியால், அதிக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களால் அவரை பார்க்க முடியவில்லை.

ஆனால், வங்காள நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ் சக்ரவர்த்தியின் மனைவியுமான சுபஸ்ரீ கங்குலி மட்டும் லியோனல் மெஸ்ஸியை நேரில் சந்தித்து, அவருடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள், தங்களால் பார்க்க முடியாத நிலையில், இந்த நடிகைக்கு மட்டும் விஐபி சலுகை கிடைப்பதா என்று கேள்வி எழுப்பி, நடிகை மற்றும் அவரது குழந்தைகளை ஆபாச வார்த்தை மூலம் கடுமையாக திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் கமென்டுகளை பதிவிட்டிருந்தனர்.

இதுகுறித்து சுபஸ்ரீ கங்குலியின் கணவர் ராஜ் சக்ரவர்த்தி, கடந்த 14ம் தேதி திட்டாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிறகு சைபர் கிரைம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பீகாரை சேர்ந்த பிட்டு ஸ்ரீவஸ்தவா என்ற வாலிபர் இதுபோன்ற ஆபாச பதிவுகளை வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து பீகார் மாநிலம் ஆரா பகுதிக்கு விரைந்த கொல்கத்தா தனிப்படை போலீசார், அந்த வாலிபரை கைது செய்தனர்.

Related Stories: