சமீபத்தில் தனது 60வது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடிய சல்மான்கான், இன்னும் முரட்டு சிங்கிளாகவே இருந்து வருகிறார். இதற்கு முன்பு அவரால் காதலித்து கைவிடப்பட்ட சில நடிகைகள், திருமணம் மற்றும் வாரிசுகள் என்று சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இன்னும் தனக்கு பொருத்தமான பெண் கிடைக்கவில்லை என்று சொல்லி புலம்பும் சல்மான்கான், முன்னதாக கோலிவுட் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சிக்கந்தர்’ என்ற இந்தி படத்தில் நடித்தார். ‘நேஷனல் கிரஷ்’ என்று சொல்லப்படும் ராஷ்மிகா மந்தனா மற்றும் சத்யராஜ், காஜல் அகர்வால் போன்றோர் நடித்திருந்தும் கூட அப்படம் வெற்றிபெறவில்லை.
இதையடுத்து சில பேட்டிகளின் மூலம் சல்மான்கானை ஏ.ஆர்.முருகதாஸும், ஏ.ஆர்.முருகதாஸை சல்மான்கானும் மறைமுகமாக தாக்கிக்கொண்டனர். இது இணையதளங்களில் வைரலானது. இனிமேல் சல்மான்கானை இயக்க மாட்டேன் என்று ஏ.ஆர்.முருகதாஸ் சொன்னார். அதுபோல், இனிமேல் கோலிவுட் இயக்குனர்களின் படத்தில் நடிக்கக்கூடாது என்று சல்மான்கான் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் சல்மான்கான் நடித்துள்ள ‘கல்வான்’ என்ற இந்தி படத்தின் டீசர் வெளியானது. இது வரும் ஏப்ரல் 17ம் தேதி திரைக்கு வருகிறது. ஹீரோயினாக சித்ராங்கதா சிங் நடித்துள்ளார்.
