ஐதராபாத்: யஷ் ஜோடியாக ‘கேஜிஎஃப் 1’. ‘கேஜிஎஃப் 2’ ஆகிய பான் இந்தியா படங்களிலும், தமிழில் விக்ரமுடன் ‘கோப்ரா’, தெலுங்கில் நானியுடன் ‘ஹிட் 3’ ஆகிய படங்களிலும் நடித்துள்ள ஸ்ரீநிதி ஷெட்டி, சமீபத்தில் ‘தெலுசு கதா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் திரைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், ‘திரைத்துறைக்கு வந்து பல ஆண்டுகளாகி விட்ட நிலையில், குறைந்த எண்ணிக்கை கொண்ட படங்களில் மட்டுமே நடித்திருக்கிறீர்களே, என்ன காரணம்?’ என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஸ்ரீநிதி ஷெட்டி, ‘உண்மைதான். கடந்த 10 ஆண்டுகளில் குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே நான் நடித்திருக்கிறேன். எனினும், அதில் எனது நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறேன் என்பதில் பெருமைப்படுகிறேன். என்னை பொறுத்தவரையில், படங்களின் எண்ணிக்கை மட்டுமே திறமையை வெளிப்படுத்த காரணமாகி விடாது. உள்ளுக்குள் மறைந்துள்ள திறமை மட்டுமே நம்மை வெளிக்கொண்டு வரும். அந்தவகையில் நான் வெற்றிபெற்றதாக நம்புகிறேன்’ என்றார்.
