பாலிவுட் இயக்குனரும், நடிகை யாமி கவுதமின் கணவருமான ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த 5ம் தேதி திரைக்கு வந்த படம், ‘துரந்தர்’. முக்கிய கதாபாத்திரங்களில் மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜூன் ராம்பால், சஞ்சய் தத், (முன்னாள் குழந்தை நட்சத்திரம்) சாரா அர்ஜூன் ஆகியோர் நடித்திருந்தனர். அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று ஹிட்டான இப்படம், பாகிஸ்தானில் ‘ஆபரேஷன் லியாரி’ மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான ‘ரா’ மேற்கொண்ட சில ரகசிய பணிகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.
இதில் சொல்லப்பட்டிருந்த கருத்துக்காக 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், வசூலில் மாபெரும் சாதனை படைத்து வருகிறது. படம் வெளியாகி இன்றுடன் 25 நாட்களான நிலையில், உலகம் முழுவதும் ரூ.1100.23 கோடி வசூலை குவித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்தியாவில் ரூ.862.23 கோடியும், மற்ற நாடுகளில் ரூ.238 கோடியும் குவித்துள்ளது. இதன்மூலம் 2025ல் அதிகமான வசூல் செய்த படம் என்ற சாதனையை ‘துரந்தர்’ படம் பெற்றுள்ளது.
