சென்னை: பி.எம் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் வெ.வ.அருண்குமார் தயாரித்துள்ள படம், ‘குயிலி’. ப.முருகசாமி எழுதி இயக்கியுள்ளார். முதன்மை கதாபாத்திரத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, ‘புதுப்பேட்டை’ சரவணன், ‘ராட்சசன்’ சரவணன் நடித்துள்ளனர். பிரவீன் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜூ ஸ்மித் இசை அமைத்துள்ளார். வேட்டவலம் த.ராமமூர்த்தி பாடல்கள் எழுதியுள்ளார். ஒரு தாயின் வைராக்கியமான வாழ்க்கை போராட்டத்தையும், மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வையும் சொல்லும் இப்படத்தை விநியோகஸ்தர் மோகன் வெளியிடுகிறார். படம் குறித்து லிசி ஆண்டனி கூறுகையில், ‘சுயவிருப்பம், கடின உழைப்பு, விடாமுயற்சி, பொறுமை ஆகியவற்றில் அதிக நம்பிக்கை வைத்திருப்பவள் நான். இதுபோன்ற விஷயங்களை அருண்குமாரிடமும் பார்த்தேன். இக்கதையை அவர் சொன்னார். இப்படம் பேசும் விஷயம் எனக்கு பிடித்திருந்தது. ‘குயிலி’ என்ற தலைப்பு இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று நான் சொன்னேன். உடனே அவர் ஒப்புக்கொண்டார்’ என்றார்.